இந்தியா

வாட்ஸ்அப்பில் உளவு ‌எப்படி நடந்தது ?

வாட்ஸ்அப்பில் உளவு ‌எப்படி நடந்தது ?

jagadeesh

இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் வாட்ஸ் அப் எண்கள் எவ்வாறு உளவு பார்க்கப்பட்டது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

இஸ்ரேலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் என்.எஸ்.ஓ. குரூப் என்ற நிறுவனம் மூலம் சுமார் 1,400 மொபைல் போன்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது ‘பெகசஸ்’ என்ற மால்வேர் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தகவல் திருடப்பட்டுள்ளன. முதலில் போலியாக வாட்ஸ் அப் கணக்கு உருவாக்கப்படும். அதைத் தொடர்ந்து, ‌தாக்குதல் நடத்த வேண்டிய வாட்ஸ் அப் எண்ணுக்கு வீடியோ கால் அழைப்பு விடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் அந்த அழைப்பை ஏற்காவிட்டாலும், அவரது அலைபேசிக்கு ‘பெகசஸ்’ மால்வேர் சென்றுவிடும்.

இதையடுத்து பெகசஸ் மால்வேர் மூலம் அலைபேசியின் மொத்த கட்டுப்பாடும், உளவு பார்ப்பவரின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அதாவது அந்த தொலைபேசியின் மூலம் அனுப்பப்படும் அனைத்து வாட்ஸ் அப் தகவல்களும், வாட்ஸ் அப் அழைப்புகளும், சாதாரணமாக பேசும் அழைப்புகளும் உளவு பார்ப்பவருக்கு கிடைத்துவிடும். மேலும், அனைத்துவிதமான passwordகள், படங்கள், கேமரா மற்றும் Microphone உள்ளிட்டவை உளவு பார்ப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

பெகசஸ் என்ற மால்வேரை சில அரசு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மால்வேரைதயாரித்துள்ள இஸ்ரேல் நிறுவனம், அதை சில நாட்டு அரசுகளின் உளவுத்துறைகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை குறி வைத்து, அவர்களின் வாட்ஸ் அப் எண்கள் மூலம் உளவுப்பார்க்கப்பட்ட தகவல் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.