இந்தியா

தொடங்கியது ஆள்சேர்ப்பு - அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் இணைவது எப்படி?

தொடங்கியது ஆள்சேர்ப்பு - அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் இணைவது எப்படி?

ஜா. ஜாக்சன் சிங்

இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் எப்படி சேர வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த போதிலும், தற்போது ஆள்சேர்ப்பு நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளது. தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளில் தங்களுக்கு எதில் விருப்பமோ, அதில் இளைஞர்கள் சேர்ந்து கொள்ள முடியும். 17.5 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தரைப்படை

இந்திய தரைப்படையில் (Army) அக்னிபாத் திட்டத்தின் கீழ் வரும் ஜூலை மாதம் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்குகின்றன. முதல்கட்ட ஆள் சேர்ப்பின் போது 25,000 அக்னி வீரர்கள் தரைப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுபவர். இரண்டாம் கட்ட ஆள் சேர்ப்பு 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும். அப்பொழுது 40,000 அக்னி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.joinindianarmy.nic.in என்ற வெப்சைட்டில் சென்று இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

விமானப்படை

இந்திய விமானப்படையில் கடந்த 24-ம் தேதி முதலாகவே ஆள் சேர்ப்பு தொடங்கிவிட்டது. இரண்டாவது கட்ட ஆள்சேர்ப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்குகிறது. விமானப் படையை பொறுத்தவரை திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட வெப்சைட்டிலேயே விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

கடற்படை

இந்திய கடற்படையில் மட்டும் ஆண் - பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கடற்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்புக்கான அறிவிக்கை கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்டு விட்டது.

அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்களின் தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்வானவர்கள் உடற்தகுதி தேர்வுக்கு செல்ல வேண்டும். அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுவர்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.