70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் கட்டணமில்லா மருத்துவம் வழங்கும் AB - PMJAY காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் என்ன? அதில் சேர்வது எப்படி? இப்பகுதியில் விரிவாக காணலாம்.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் கட்டணமில்லா மருத்துவம் வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2018-ல் முதன்முதலாக தொடங்கி வைத்துள்ளார். இதன் முக்கியத்துவத்தை அறியும் முன், ஏன் அதை இப்போது அறிய வேண்டும் என்பதை அறிவோம்.
உலக முதியோர் நல மேற்பார்வை என்ற அமைப்பு சிறிது நாட்களுக்கு முன்பாக முதியோர் நலத்திட்டம் குறித்தான 91 நாடுகள் அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டனர். இதில், முதியோர் நலன் சிறப்பாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 73 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 8.6%த்திற்கு மேல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் என நமக்கு தெரிகிறது. இது 2050 ல் 19.6% என்று அதிகரிக்குமென கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்னும் 25 ஆண்டுகளில், 10.3 கோடியிலிருந்து 31 கோடியாக இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்படி, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களின் மருத்துவ தேவை என்பதும் அதிகரிக்கும். இன்றைய சூழலில் இந்தியாவில் அரசு காப்பீட்டு திட்டம் மூலமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இளைய தலைமுறையினர் 3 - 4 % பேர்தான் இருக்கிறார்கள். ஆனால், முதியவர்கள் எண்ணிக்கையோ 7% என அதிகரித்துள்ளது.
இதற்கிடையே முதியவர்களுக்கு தனியார் காப்பீடு கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதாகவும், முதியோர் நலனில் முக்கியத்துவம் கொடுக்கப்படாததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆகவே அரசின் இலவச காப்பீடு திட்டம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியான ஒரு காப்பீட்டு திட்டமான AB PMJAY பற்றி இப்போது அறிவோம்...
முன்பு நிபந்தனைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், தற்போது 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே பலனடையும் வகையில் விரிவடைந்துள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள்.
ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவம் வழங்கப்படுகிறது.
இதில் மத்திய அரசு 60% தொகையையும், மாநில அரசு 40% தொகயையும் செலவிடுவார்கள்.
இதில் முதற்கட்டமாக, மத்திய அரசுக்கு 3,437 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 30,000 மருத்துவமனைகள் இந்த திட்டத்திற்காக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டதிற்கு கீழ் வரும் திட்டங்கள் பெரும்பாலும் 2 லட்சத்துக்கு கீழ் இருப்பதால், பெரும்பாலானவர்கள் பயன்பெற முடியும் என்று கூறுகிறது. ஒருவேளை ரூ. 5 லட்சத்துக்கு மேல் சிகிச்சை செலவாகும் பட்சத்தில், பிரதான் மந்திரி திட்டத்தை விடுத்து ராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதி மூலமாக, 15 லட்சம் வரை நிதி பெற்று மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
70 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
www.beneficiary.nha.gov.in இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் மற்றும் ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
ஒப்புதல் கிடைத்ததும் இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆயுஷ்மான் பாரத் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வயதானவர்களால் நேரடியாக இதை fill செய்ய முடியவில்லை என்றால், Beneficiary login மூலம் வேறொருவர் (நெருங்கிய உறவுகள்) அவர்களுக்கு உதவலாம்.