இந்தியா

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

webteam

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு‌வேளையில், ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், 23 வயதான இளம் மருத்துவ மாணவி. சிங்கப்பூர் வரை அழைத்து சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அடுத்த 1‌3 நாட்களிலேயே அவரின் உயிர் பிரிந்தது. இவ்வழக்கில் முகேஷ் சிங்,‌ வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய்குமார், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், சிறார் ஒருவரையும் சேர்த்து ‌6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஓட்டுநர் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டு‌‌கள் தண்டனைக்குப்பின், அந்த 16 வயது சிறுவனை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதையடுத்து மீதமிருந்த 4 பேருக்கும் தூக்குதண்டனை என்ற அறிவிப்பை 2013 செப்டம்பரில் டெல்லி கீழமை நீதிமன்றம் வழங்கியது. அதனை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்பின்னர், மேல்முறையீட்டு மனுக்களும், சீராய்வு மனுக்களும் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டே வந்தன.

அவர்கள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால், தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போனது. பல்வேறு நகர்வுகளுக்கு பிறகு இன்று காலை குற்றவாளிகளை தூக்கிலிடுவது என உறுதி செய்யப்பட்டது. இதனிடையே நான்கு பேரையும் தூக்கிலிடும் பணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் என்ற தூக்கிலிடும் ஊழியரின் சேவையை பயன்படுத்த திகார் சிறை நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக உத்தரபிரதேச சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. அதற்கு உத்தரபிரதேச சிறை நிர்வாகமும் ஒப்புக்கொண்டது.

அதன்படி முன்னதாகவே திஹார் சிறைக்கு வந்த பவன், தனி அறையில் தங்கினார். உ.பி மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். இன்று அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்தார். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனிடம் 8 மணிலா தூக்கு கயிறுகளை சிறைத்துறை அதிகாரிகள் அளித்தனர். 8 கயிறுகளில் நான்கை தேர்ந்தெடுத்த பவன், மீதமுள்ள 4 கயிறுகளை தேவைப்படின் பயன்படுத்த வைத்துக்கொண்டார்.

இறுதியில் டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் காலை 5.37 மணிக்கு 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனுக்கு தலா ரூ. 20000 என ரூ. 80,000 ஊதியமாக தரப்படுகிறது.

தூக்கிலிடும் பணியில் ஈடுபட்ட பணியாளர் பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 4 குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து இறந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர் அதனை பதிவு செய்தார். திஹார் சிறையில் கடைசியாக நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குரு 2013-ல் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.