இந்தியா

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவிற்கு அதிமுகவின் ஆதரவு எவ்வளவு முக்கியம்?

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவிற்கு அதிமுகவின் ஆதரவு எவ்வளவு முக்கியம்?

Rasus

இந்தியாவின் 14வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கவிருக்கிறது. இந்தியாவின் மிக உயரிய பதவியாக கருதப்படுவது ஜனாதிபதி பதவி. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதிதான். இந்த உயரிய பதவிக்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது மத்திய அரசுக்கு மிக முக்கியம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற தேவையான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவை மட்டும் வைத்து பெற முடியாது. ஒரு பெரிய மாநில கட்சியின் ஆதரவு பாஜகவிற்கு தேவை. அந்த பெரிய கட்சியாக அதிமுக இருக்குமா? என்ன சொல்கிறது கணக்கு?

இந்திய ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களால் தேர்தெடுக்கப்படுவார். இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.களை சேர்த்து 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். ஒரு எம்.பி.-யின் வாக்கு மதிப்பு 708. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலத்தின் எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பும் மாறும். அதிகபட்சமாக உத்தரபிரதேச எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு 208, குறைந்தபட்சமாக சிக்கிம் எம்.எல்.ஏ வின் வாக்கு மதிப்பு 7. இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநில எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 10,98,882. இதில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பெரும்பான்மை பெற 5,49,442 வாக்குகள் வேண்டும்.

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 5,37,683 வாக்குகள் உள்ளன. இந்த அணி வெற்று பெற மேலும் 11,759 வாக்குகள் தேவை. தொட்டுவிடும் தூரத்தில் தான் வெற்றி இருக்கிறது என்றாலும், கூட்டணியில் இல்லாத ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவை நம்பியே பாஜக இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுகவிற்கு 59,224 வாக்குகள் இருக்கிறது. அதிமுகவின் ஆதரவை பாஜக பெறும் பட்சத்தில் மிக எளிதாக வெற்றி பெற முடியும். இப்போது அதிமுகவின் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனைகளாலும், மீதம் இருக்கும் நான்கு ஆண்டு அட்சியை முழுமையாக முடிக்க மத்திய அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதாலும் பாஜக நிறுத்தும் வேடபாளரை அதிமுக ஆதரிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. அப்படி அதிமுக ஆதரிக்கும்பட்சத்தில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவது சுலபம்.