இந்தியா

“எனக்கு இந்த ஆலோசனையை கூற இந்திரா ஜெய்சிங் யார்”? - கொந்தளித்த நிர்பயாவின் தாய்

webteam

ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளிகளை மன்னித்துள்ள சோனியா காந்தியை உதாரணமாக எடுத்துக்கொள்ளும்படி, நிர்பயாவின் தாய்க்கு பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அறிவுறுத்தி உள்ளார்.

பெண்களுக்கு எதிரான அநீதிக்கு சட்டரீதியிலாக போராடும் பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது ட்விட்டரில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். அதில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியின் வேதனையை தாம் முழுமையாக அறிவதாகவும் எனினும் ராஜீவ் கொலை வழக்கில், குற்றவாளி நளினியை மன்னித்த சோனியா காந்தியை முன்மாதிரியாக பின்பற்றும்படி கேட்டுக்கொள்வதாக பதிவிட்டிருந்தார். நிர்பயாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாலும் மரண தண்டனையை தாம் எதிர்ப்பதாக இந்திரா ஜெய்சிங் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, “என்னால் நம்ப முடியவில்லை. இந்த ஆலோசனையை கூறுவதற்கு எப்படி ஜெய்சிங்கிற்கு தைரியம் வந்தது. குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என நாடே எதிர்நோக்கி இருக்கிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்திரா ஜெய்சிங் போன்றோரின் ஆலோசனையை நான் ஏன் கேட்‌க வேண்டு்ம்? இந்த ஆலோசனையை கொடுப்பதற்கு இந்திரா ஜெய்சிங் யார்? பலமுறை அவரை உச்சநீதிமன்றத்தில் சந்தித்துள்ளேன். ஆனால் இன்று அவர் குற்றவாளிகளுக்காக பேசுகிறார். இதுபோன்றோர் குற்றவாளிகளை ஆதரிப்பதன் மூலம் பிழைப்பு நடத்துகிறார்கள். இப்படி செய்தால், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிற்காது. குற்றவாளிகளை தூக்கிலிடும் வரை நான் திருப்தி அடைய மாட்டேன்” எனத் தெரிவித்தார்.