சந்திரபாபு நாயுடு twitter page
இந்தியா

எடுத்த சபதம் முடித்த சந்திரபாபு நாயுடு: தெலுங்கு தேசம் ஆந்திராவில் அமோகம் - சாதித்தது எப்படி?

ஆந்திராவில் ஜெகனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி.

இரா.செந்தில் கரிகாலன்

நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் நடந்த மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. இந்தநிலையில் அங்கே ஜெகனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. மூன்றாவது முறையாக முதல்வர் அரியணையில் அமரவிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. பிரதமர் மோடி தொடங்கி அவருக்கான வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி

கடந்த 1999-ம் ஆண்டுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளியில் 2014-ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு. அப்போது, காங்கிரஸில் இருந்து வெளியேறி ஒய்.எஸ்.ஆர் எனும் தனிக் கட்சியை ஆரம்பித்த ஜெகன்மோகன் ரெட்டி 70 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். அதனைத் தொடர்ந்து, 2018-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார் சந்திரபாபு நாயுடு. தொடர்ந்து, 2019 தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றியது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தத் தேர்தலில், தெலுங்குதேசம், பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. 144 இடங்களில் தெலுங்குதேசமும், 21 இடங்களில் ஜனசேனாவும், பத்து இடங்களில் பாஜகவும் போட்டியிட்டன. இந்தநிலையில், 130-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று ஆந்திராவில் மீண்டும் தெலுங்குதேசம் ஆட்சியமைக்கவிருக்கிறது.

சந்திரபாபு, மோடி

ஜெகன் ஊரகப் பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார், நகர்ப்புறங்களைக் கண்டுகொள்வதில்லை என்ற எண்ணம் அங்குள்ள மத்திய தர வர்க்க மக்களிடம் எழுந்தது, அமராவதி தலைநகர் மாற்ற விவகாரத்தில் ஜெகனின் குழப்பமான முடிவுகள், தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஜெகன் எடுத்த நடவடிக்கைகள், தீர்க்கப்படாத விவசாயிகளின் பிரச்னைகள் என பல விஷயங்கள் ஜெகனின் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

2014-ல் வெளியிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தந்த பவன் கல்யாண் இந்தமுறை கூட்டணிக்குள் இணைந்து போட்டியிட்டிருக்கிறார். அந்த வாக்கு வங்கியும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கை கொடுத்திருக்கிறது. வெற்றிபெற்று முதல்வரானால் மட்டுமே மீண்டும் சட்டமன்றத்துக்குள் வருவேன் என சந்திரபாபு நாயுடு சபதம் செய்திருந்தார். அந்த வகையில் தற்போது வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்குள் வரவிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.