இந்தியா

'அலோபதி மருத்துவ முறையை எப்படி பாபா ராம்தேவ் அவதூறாகப் பேசலாம்?' - உச்ச நீதிமன்றம் கேள்வி

'அலோபதி மருத்துவ முறையை எப்படி பாபா ராம்தேவ் அவதூறாகப் பேசலாம்?' - உச்ச நீதிமன்றம் கேள்வி

webteam

அலோபதி மருத்துவத்தையும் மருத்துவர்களையும் தவறாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசும், பதஞ்சலி நிறுவனமும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பேசி வருவதற்கு எதிராக இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, யோகா பயிற்சி முறையை பாபா ராம்தேவ் பிரபலப்படுத்தியிருக்கலாம். ஆனால், அலோபதி மருத்துவ முறையை எப்படி அவர் அவதூறாகப் பேசலாம் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அலோபதி மருத்துவ முறையைவிட ஆயுர்வேத மருத்துவ முறை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கான உறுதிப்பாட்டினை அவரால் கொடுக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது பொது சுகாதாரத்தை சிக்கல் உண்டாக்கக்கூடியது என சற்று காட்டமாகக் கூறினார்.

தொடர்ந்து மத்திய அரசு, மத்திய சுகாதாரத் துறை, விளம்பரங்களுக்காக தர நிர்ணய ஆணையம், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டார்.