இந்தியா

ஒன்றும் அறியாமல் போன் செய்த அம்ருதா... சதித் திட்டம் போட்ட மாருதி ராவ்..!

ஒன்றும் அறியாமல் போன் செய்த அம்ருதா... சதித் திட்டம் போட்ட மாருதி ராவ்..!

webteam

தெலங்கானாவில் ப்ரனய் கொல்லப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தெலுங்கானாவில் நெலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஜோடிகளான ப்ரனய் - அம்ருதா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். அம்ருதாவும், ப்ரனயும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் போராடி திருமணம் செய்து கொண்டனர். ப்ரனய் வீட்டார் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அம்ருதா கர்ப்பம் அடைந்த செய்தி கேட்டு பின்னர் வீட்டில் சேர்த்துக் கொண்டனர். ஆனால் அம்ருதாவின் தந்தையான மாருதி ராவிற்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை.

இதனால் தனது மகளின் கணவரை அதாவது தன்னுடைய மருமகனையே கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இதற்காக கூலிப்படைக்கு 1 கோடி ரூபாய் வரை அவர் பேரம் பேசியதும் தெரியவந்துள்ளது. நாளுக்கு நாள் புது தகவல்கள் கசிந்து வரும் இவ்விவகாரத்தில் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது எப்படி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

விசாரணைக்குப்பிறகு, இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சுபாஷ் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர ஆஸ்கர் அலி, முகமது பரி, அப்துல் கரீம், ஸ்ரவன், சிவா, உள்ளிட்டோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒன்றும் அறியாத அம்ருதா..

திருமணமான புதிதில் அம்ருதா தனது தாயிடம் தொடர்பில் இருக்கவில்லை. ஆனால் கர்ப்பமான பின்பு தனது தாயிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தார். என்ன உணவு சாப்பிடனும்..? எப்படி இருக்கனும் என்பதை தெரிந்து கொண்டார். தாயும் அம்ருதாவுக்கு நல்லபடியாக அறிவுரை வழங்கி வந்தார். தனது மகள் அம்ருதா அடிக்கடி போனில் பேசி வந்ததை அம்ருதாவின் அப்பாவிடம் அவரது தாய் சொல்லி வந்துள்ளார். அப்படித்தான், அம்ருதா தனது கணவர் ப்ரனயுடன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்வதை தனது அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மா அதனை தனது கணவரான மாருதி ராவிடம் சொன்ன உடன், ஏற்கெனவே ப்ரனயை கொல்ல சதித் தீட்டம் தீட்டியிருந்த மாருதி ராவ் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். ஆனால் தனது கணவரிடம் தன் மகள் குறித்த விவரங்களை தெரிவித்த அந்த அப்பாவி அம்மாவிற்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிகிறது.

மெல்ல மெல்ல நடந்த சதி..

ஜூலை முதல் வாரத்தில் இருந்த ப்ரனயை கொல்ல மாருதி ராவ் சதித் திட்டம் போட்டுள்ளார். இதற்காக கூலிப்படையிடம் அதற்கான தொகையை பேரம் பேசியிருக்கிறார். முதற்கட்டமாக அவர்கள் 2.5 கோடி கேட்க மெல்ல மெல்ல அந்த பேரம் குறைந்து முடிவில் 1 கோடியில் முடிந்திருக்கிறது. அதன்பின் கொலைக்கு முன்னதாக 50 லட்சத்தை அவர்கள் முன்பணமாக கேட்டிருக்கின்றனர். ஆனால் மாருதி ராவ் அவர்களுக்கு 16 லட்சத்தை வழங்கிவிட்டு ப்ரனயின் வீட்டையும் கூலிப்படையினருக்கு அடையாளம் காட்டி கொடுத்திருக்கிறார்.

முறிந்து போன கொலை முயற்சி

அதன்படி அடிக்கடி போனில் பேசிக்கொள்ள தங்களுக்கு தேவையான சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர். பின்னர் போலி நம்பர் ப்ளேட்டுடன் ஒரு இருசக்கர வாகனத்தையும் வாங்கியிருக்கின்றனர் கூலிப்படையினர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி ப்ரனயை ஒரு பார்லர் அருகில் வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளனர் கூலிப்படையினர். ஆனால் அவர் அருகே உறவினர் ஒருவர் நின்றிருந்தால் அவர்கள் சதித் திட்டம் முறிந்துபோனது. காரணம் இருவரில் யார் ப்ரனய் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அப்படி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக ப்ரனயை கொலை செய்துள்ளனர் கூலிப்படையினர்.

டீசர்ட் மாற்றம்

கொலை செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்ற அவர்கள் பின்னர் தங்களின் டீசர்ட்டை மாற்றிவிட்டனர். பின்னர் தனித்தனி பாதைகளில் சென்ற அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.