இந்தியா

நடுவானில் விமான மோதல் தவிர்ப்பு: பெண் விமானி ’கோலி’க்கு குவியும் பாராட்டு!

நடுவானில் விமான மோதல் தவிர்ப்பு: பெண் விமானி ’கோலி’க்கு குவியும் பாராட்டு!

webteam

நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் மயிரிழையில் மோதலில் இருந்து தப்பிய சம்பவம் நடந்த போது இரண்டு விமானங்களையும் பெண் விமானிகளே இயக்கியுள்ளனர்.

டெல்லியில் இருந்து புனேவுக்கு விஸ்டாரா ஏ-320 நியோ என்ற விமானம் கடந்த புதன்கிழமை சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க, ஏர் டிராபிக் கன்ட்ரோலில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அந்த விமானத்தின் விமானி, 27 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அதே உயரத்தில் எதிர்திசையில் இருந்து மும்பையில் இருந்து போபால் செல்லும் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களிலும் 261 பயணிகள் இருந்தனர்.

இரண்டும் 27 ஆயிரம் அடி உயரத்தில் எதிரெதிர் திசையில் நெருங்கி வந்தன. இரண்டு விமானங்களிலும் எச்சரிக்கைக் கருவி சத்தம் எழுப்பியது. பின்னர் தவறை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை வேறு பக்கமாக திருப்பினர். சில நொடிகளில் இந்த மாற்றம் நடந்தது. இல்லை என்றால் நடுவானில் விமானங்கள் மோதி, கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்துகள் குறித்து விசாரிக்கும் ஆணையம் (AAIB) விசாரித்து ஏர் டிராபிக் கன்ட்ரோல் ரூமில் இருந்தவர்களை சஸ்பென்ட் செய்துள்ளது. 

இந்நிலையில் அந்த நேரத்தில் பெண் விமானிகளே இரண்டு விமானத்திலும் விமானத்தை இயக்கியுள்ளனர். ஏர் இந்தியா விமானத்தை பெண் கமாண்டர் அனுபமா கோலி இயக்கியுள்ளார். அப்போது தனக்கு இடது பக்கத்தில் இருந்து விஸ்தாரா விமானம் வருதைக் கண்டார். ஏர் கண்ட்ரோலில் இருந்து வந்த தகவல்கள் அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தின. அதற்குள் விஸ்டாரா விமானம் நெருங்கிவிட்டது. காக்பிட்டில் அபாய சத்தம் எழுந்தது. உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு தனது விமானத்தை உயரத்தில் ஏற்றினார் கோலி. விஸ்டாரா விமானம் மோதாமல் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த நேரத்தில், விஸ்டாரா விமானத்தின் விமானி கழிவறை சென்றதால் பெண் விமானிதான் விமானத்தை இயக்கியுள்ளார். 

இதையடுத்து 20 வருடமாக விமானியாக பணியாற்றி வரும் அனுபமா கோலிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.