டெல்லியில் உள்ள பிரபல ரெட் லைட் பகுதியில் விற்கப்பட்ட 16 வயது சிறுமி தனது 9 மாத கர்ப்பிணி அக்காவின் சாதுர்யமான நடவடிக்கையால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டாள்.
மேற்குவங்க மாநிலத்தின் டைமண்ட் ஹார்பர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண். 5 மாதங்களுக்கு முன்பு தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்தாள். கொல்கத்தாவில் இருந்து அவர்கள் ரயில் மூலமாக டெல்லி சென்றனர். டெல்லி சென்றடைந்த உடன் அந்த இளம்பெண்ணை, காதலன் டெல்லியின் மிகவும் பிரபலமான ரெட் லைட் விபச்சார பகுதியான ஜி.பி.சாலையில் விற்றுவிட்டான். அவளை இருட்டறையில் அடைத்தனர். அவளைவிட வயதில் மூத்த பெண்கள் இருவர் அங்கிருந்தனர்.
5 மாத காலமாக கட்டாயப்படுத்தி அந்த சிறுமியை புரோக்கர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தனர். பின்னர் ஒருநாள், தனது வாடிக்கையாளர் ஒருவரது செல்போனில் இருந்து தாயின் மொபைலுக்கு ஃபோன் செய்து தனது அவல நிலையை அந்த சிறுமி தெரிவித்தார். பின்னர் அவளது குடும்பத்தினர் கொல்கத்தா போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். கொல்கத்தா போலீசார் டெல்லி போலீசின் உதவியுடன் ஜி.பி.சாலையில் ரெய்டு செய்தனர். ஆனால் அந்த பெண் கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர் அந்த சிறுமியின் கர்ப்பிணி அக்கா தங்கையை மீட்க நூதனமான முறையை கையாண்டார். தங்கை அழைத்த அந்த வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணிற்கு ஃபோன் செய்து உடனே துண்டித்து விட்டாள். பிறகு அந்த வாடிக்கையாளர் உடனடியாக ஃபோன் செய்தார். அப்போது, தவறுதலாக ஃபோன் செய்துவிட்டதாகக் கூறி கர்ப்பினி அக்கா லாவகமாக பேச்சை தொடங்கினார். அவருடன் நீண்ட நேரம் பேசினார். விருப்பம் கொண்டதாக கூறினார். அந்த வாடிக்கையாளரும் டெல்லிக்கு வருமாறு அழைத்தார். உனக்கு தேவையான அனைத்து செலவுகளையும் பார்த்து கொள்வதாக அவர் கூறினார். புகைப்படங்கள் மற்றும் முகவரியை அனுப்பி வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அந்த கர்ப்பிணி அக்கா விவரத்தை மேற்குவங்க மற்றும் டெல்லி போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அந்த வாடிக்கையாளரை கைது செய்தனர். அந்தப் பெண் இருக்கும் ரெட் லைட் பகுதியை காண்பிப்பதாகவும், சோதனைக்கு உதவுவதாகவும் அவர் கூறினார். ஆனால் இந்த முறை நடத்தப்பட்ட சோதனையிலும் அந்த பெண் கிடைக்கவில்லை. பின்னர் அடுத்தடுத்து தொடர் சோதனைகள் செய்யப்பட்டது. பல சோதனைகளுக்கு பிறகு அந்த 16 வயது இளம் பெண் மீட்கப்பட்டார். அவளது உடலில் சிகரெட்டால் சுட்டது உள்ளிட்ட பல்வேறு காயங்கள் இருந்தன. கொடுமையான நகரத்தில் இருந்து தனது அக்காவின் சாதுர்யமான செய்கையால் அச்சிறுமி மீண்டு வந்தாள். அந்தப் பெண்ணை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.
தனக்கு நேர்ந்த அவலம் குறித்து அந்த இளம் பெண் போலீசாரிடம் கூறுகையில், “ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் எனக்கு உணவு கொடுத்தார்கள். அழைத்துச் சென்ற நாள் முதலே என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். வாடிக்கையாளர்கள் ஏதேனும் குறைகள் கூறினால் பட்டினி போட்டுவிடுவார்கள். என் தந்தை வயதுடையவர்கள் கூட வாடிக்கையாளர்களாக வந்தனர்.
காலை 11 மணிக்கு முதல் ஷிப்ட் தொடங்கும். வாடிக்கையாளர்கள் பிராத்தலுக்கு வருவார்கள். பின்னர் மாலை 4 மணிக்கு உணவு வழங்குவார்கள். அவர்கள் வழங்கும் உணவு தான் கிடைக்கும். மேற்கொண்டு நாம் எதுவும் கேட்க முடியாது. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் இரவு 8 மணிக்கு அடுத்த ஷிப்ட் தொடங்கும். விடிய விடிய அதிகாலை 4.30 மணி வரை பிராத்தல் நடைபெறும். நான் வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். பின்னர் உணவு வழங்குவார்கள். அதன்பிறகே ஒரு சிறிய அறையில் உறங்க செல்வோம்.
வாடிக்கையாளர்கள் பிராத்தலின்போது வெறும் 350 ரூபாய் மட்டுமே கொடுப்பார்கள். அதனையும் புரோக்கர்களிடம் தான் கொடுப்பார்கள். வாடிக்கையாளர்கள் 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்தாலும் அதனையும் பிடுங்கிக் கொள்வார்கள்” என்று அந்த சிறுமி கூறியுள்ளார்.