2000 ரூபாய் PT
இந்தியா

”எப்போதாவது நடக்குமா? எப்பொழுதுமே நடக்குமா?” - 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுதல் - சில புரிதல்கள்!

புழக்கத்தில் இருக்கும் மொத்த நோட்டுகளின் மதிப்பில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே உள்ள இந்த 2000 ரூபாய் நோட்டுகள் நம்மைப் போன்ற சாமானியர்களின் பாக்கெட்டுகளில் இல்லை என்பது மட்டும் உண்மை!.

Jayashree A

மத்திய அரசு திடீரென்று நினைத்து இந்த 2000 ரூபாய் நோட்டைத் தடை செய்திருப்பதாகப் பலரும் பல இடங்களிலும் விவாதித்தும், விமர்சித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஊடகங்களில் பல பொருளாதார வல்லுநர்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந்த வரிசையில் இதோ இதைப்பற்றிய ஆடிட்டர் ராகவன் இயக்குனர் F.A., the Finance Academy அவரின் கருத்துக்கள்:

“முதல் வரியிலேயே- உண்மைதான் என்றாலும் - அநேக தவறுகள்! அது மட்டும் இன்றி இந்த நடவடிக்கையின் உண்மையான பொருளையும், நோக்கத்தையும் புரிந்து கொள்ளாததும் இவ்வகை விவாதங்களை பாதிக்கின்றது. ஒரு பக்கம் இழுக்கின்றது. புரிதலுக்கு மெனக்கெட வேண்டும். இப்பொழுது மெனக்கிடலாம்.

முதலாவது:

இது மத்திய அரசின் அறிவிப்பு அல்ல.

" என்ன சார்! அரசும் ஆர்பிஐயும் ஒன்றுக்குள்ளே ஒன்றுதானே!" என்பவர்கள் மேலே தொடர வேண்டாம். உங்களுக்கு தொலைக்காட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன

அடுத்து:

இது தடை அல்ல! நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், இது வெறும் 'திரும்பப் பெறுதல்' மட்டுமே!

தடைக்கும் திரும்பப் பெறுதலுக்கும் என்ன வித்தியாசம்?

தடை என்றால், உங்கள் நோட்டுக்களை நீங்கள் வங்கிகளிடம் மட்டும்தான் திருப்பித் தர முடியும்! ஆனால், திரும்பப் பெறுதலில் நீங்கள் இறுதித் தேதி வரை அதை பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கலாம். அப்படியானால் இறுதித் தேதிக்குப் பின் தடை வரலாம் அல்லது புதியதாக வேறு அறிவிப்புகள் வரலாம். ஆண்டவனே அறிவான்- ஸாரி, ஆள்பவனே அறிவான்!

ரூபாய் நோட்டு அச்சிடுவது என்பது ஏதோ இலவச பேருந்து மாதிரி 'நமக்கு என்ன?!' என்று ஓட்டிவிட முடியாது.

இந்த ரூபாய் நோட்டை, இப்பொழுது, இந்த அளவு அச்சிடுவோம் அதன் பின் புழக்கத்தை அதிகப்படுத்துவோம் அல்லது குறைப்போம் என்கிற முடிவுகளுக்குப் பின்னால் பெரும் பொருளாதார தத்துவங்கள் உண்டு. பலவிதமான விளைவுகளையும் கணித்து அதற்கு ஏற்றபடி முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். நாம் எளிதில் தொடர்புப் படுத்திக் கொள்ள முடியாத விளைவுகளும் இவற்றில் உண்டு. உதாரணத்திற்கு நம்முடைய ரூபாய் நோட்டுகள் அதன் புழக்கம் எல்லாம் சேர்ந்து தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கலாம்.

அது எப்படி சார் ?என்று கேட்பது புரிகிறது. அரசு, மத்திய வங்கியோ சிரமங்கள் இன்றி, ஆழ்ந்த அறிவும் சிந்தனையும் இன்றி, தொலைநோக்கு இன்றி இது போன்ற செயல்களை செய்து விட முடியாது என்று மட்டும் உணர்ந்து கொண்டால் போதும்.

சரி இது என்ன அடிக்கடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையா அல்லது தொடர் நடவடிக்கையா? எப்போதாவது நடக்குமா? அல்லது எப்பொழுதுமே நடக்குமா?

அரசாங்கமோ வங்கியோ தொடர்ந்து விளைவுகளைக் கண்காணித்தபடி இருக்க வேண்டும். அவ்வப்போது உருவாகும் சூழ்நிலைக்கு ஏற்பத் தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அப்படித்தான் எடுத்து வருகிறார்கள்.

முடிவாக:

ஒரு தேசத்தில் பல அளவில் ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் புழக்கத்தில் விடப்படும். நாட்கள் செல்ல செல்ல அவை பலவித பலன்களைத் தரும். சில கெடுதல்களும் வரும். 'பெரிய' ரூபாய் நோட்டுகள் பொதுவாக ஊழலுக்கு உதவும். பதுக்குவது சுலபம். அதனாலேயே பல வளர்ந்த நாடுகளில் அந்தந்த ஊர் நாணயங்கள் நோட்டுகள் நூறைத் தாண்டியதில்லை.

பாய்கிற புலி பதுங்கும் என்று படித்திருக்கிறோம்.

இந்த நடவடிக்கைக்குப் பாய்ந்திருக்கிற புலிகள் எல்லாம் பதுக்கியிருக்கும் என்பது புரிகிறது அல்லவா?

புழக்கத்தில் இருக்கும் மொத்த நோட்டுகளின் மதிப்பில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே உள்ள இந்த 2000 ரூபாய் நோட்டுகள் நம்மைப் போன்ற சாமானியர்களின் பாக்கெட்டுகளில் இல்லை என்பது மட்டும் உண்மை!

மற்றபடி இந்த முடிவினால் அந்த சொற்ப மனிதர்களும் பணத்தை மாற்ற அவதிப்படக்கூடாது என்று தான் செப்டம்பர் 30 வரை அவகாசம் தந்திருக்கிறார்கள். செப்டம்பர் 30 வரை டெபாசிட் செய்யலாம்; மாற்றவும் செய்யலாம்.

- டெபாசிட்டுக்கு எந்த லிமிட்டும் இல்லை; மாற்றிக் கொள்வதற்கு மாத்திரம் ஒரு நாளைக்கு ஒரு வங்கிக்கு 20 ஆயிரம் ரூபாய் என்கிற லிமிட் வைத்திருக்கிறார்கள். எல்லா வங்கிகளும் இதற்கு உதவும். அதற்கும் மேலாக 19 ரிசர்வ் வங்கிக் கிளைகளும் இதற்கு உதவும்

அவர்களுக்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நமக்கோ கஷ்டப்படக்கூடாது. நம்மில் சிலருக்கோ நம் ரகசிய ஸௌக்யம் சேதாரமாகக்கூடாது.

இத்தனையையும் மனதில் கொண்டு அவர்கள் சில முடிவுகளை எடுக்கிறார்கள். சாமானியர்களுக்கு இதனால் எந்தப் பாதிப்புமில்லை; பாதிக்கப்பட்டவர்கள் சாமானியராக இருக்கப்போவதுமில்லை” என்று கூறுகின்றார்.