இந்தியா

பெங்களூரு: 'கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்கப்படும் அவலம்'

பெங்களூரு: 'கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்கப்படும் அவலம்'

webteam

பொருட்களை கள்ளச்சந்தையில் விற்று லாபம் பார்க்கும் அவலத்தை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கொரோனா கொடூரம் தலைவிரித்தாடும் இக்காலத்தில் இதை வைத்து பணம் சம்பாதிப்பதற்காக மருத்துவமனை படுக்கைகளையே கள்ளச்சந்தையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூருவில் மருத்துவமனைகளில் படுக்கைகளை போலி பெயர்களில் பதிவு செய்து, அவற்றை கொரோனா நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்கும் கொடுமை நடப்பதாக பாரதிய ஜனதா கட்சி எம்பியான தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா தொற்று சுனாமி போல் பரவி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் 80% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 4,065 படுக்கைகள் பதுக்கப்பட்டிருப்பதாக தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சை பெற சாமானிய மக்கள் தவித்து வரும் நிலையில் பணம் படைத்தவர்கள், பதுக்கப்பட்டுள்ள இப்படுக்கைகளை அதிக விலை கொடுத்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறிழைத்த மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.

இதற்கிடையில் பெங்களூருவில் கொரோனா சோதனை செய்யப்படும் 2-இல் ஒருவருக்கு தொற்று உறுதியாவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனை நடத்தப்படும் ஒவ்வொரு 100 பேரிலும் 55 பேருக்காவது தொற்று உறுதியாவதாக அம்மாநில சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.