இந்தியா

“இந்த முறையாவது தூக்கிலிடுவார்களா?” - நிர்பயாவின் தாய் பேட்டி

“இந்த முறையாவது தூக்கிலிடுவார்களா?” - நிர்பயாவின் தாய் பேட்டி

webteam

மூன்றாவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தனக்கு எவ்வித சந்தோசமும் இல்லை என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

நாட்டையே அதிரச் செய்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தூக்குதண்டனை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு அளித்ததால், தூக்குதண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிக்கொண்டே போனது.

இதனிடையே 4 பேருக்கும் தனித்தனியே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி, திகார் சிறை நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுரேஷ் கைத் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முயல்வதால்தான் ஐதராபாத் என்கவுன்ட்டர் போன்ற சம்பவங்களை மக்கள் கொண்டாடுவதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார். நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் கடந்த 7 ஆண்டுகளாக நீதித்துறையுடன் விளையாடுவதாகவும், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குக் குற்றவாளிகள் தரப்பில், கடைசி மூச்சு உள்ள வரை சட்டப்போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்றும், நால்வருக்கும் ஒன்றாகத்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது மார்ச் 3 ஆம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், மூன்றாவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தனக்கு எவ்வித சந்தோசமும் இல்லை என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். எனவே இறுதியாக மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் திருப்தி அடைகிறேன். குற்றவாளிகள் மார்ச் 3-ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

நிர்பயாவின் தந்தை கூறுகையில், குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் மேலும் காலதாமதம் ஆகாது என நம்புவதாக தெரிவித்தார்.