இந்தியா

“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்

“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்

rajakannan

சபரிமலை பிரச்னையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக தலைமை செயலளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கவிதாவும், பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா என்பவரும் இன்று காலை சபரிமலைக்கு சென்றனர். இதில் ரஹானா இருமுடி அணிந்து ஐயப்ப பக்தராக சென்றார். பலத்த பாதுகாப்புடன் கவச உடைகள் அணிந்தபடி இருவரும் ஐயப்பன் கோயில் நோக்கிச்சென்றனர். இவர்கள், சபரிமலை சன்னிதானத்தின் நடைப்பந்தல் வரை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அதற்கு மேல், இரு பெண்களையும் அனுமதிக்க மறுத்து ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை தந்திரியும் பெண்களுக்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக கூறினார். கேரள அரசும் இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டது. சபரிமலை பக்திக்கான இடம், போராட்டக்காரர்களுக்கு அல்ல என்று கேரள அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, இரண்டு பெண்களும் திரும்பி செல்ல சம்மதித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் பம்பை நோக்கி அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மேலும், 46 வயதுடைய மேரி ஸ்வீட்டி என்ற பெண் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றார். அவரையும் கேரள போலீசார் பேசி திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சபரிமலை பிரச்னையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக தலைமை செலளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 3 மாநிலங்களுக்கு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் வலுக்கும் நிலையில் உள்துறை அமைச்சகம் இந்த கடிதத்தினை எழுதியுள்ளது. 

3 ஆயிரம் பேர் வரை போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சமூக வலைதளங்கள், இணையதள சேவையை முடக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மூன்று மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.