ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். துணை முதல்வராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளார்.
இந்த நிலையில், “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும்; இல்லாவிடில் உள்துறையையும் நானே ஏற்பேன்” என பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், அனிதாவை வெளிப்படையாக விமர்சித்த அவர், தனது கடமைகளில் இருந்த அனிதா தவறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். மாநிலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பவன் கல்யாண் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இதையும் எதிர்க்கட்சியும் விமர்சித்திருந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரோஜா, ”உள்துறை அமைச்சர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்தத் தவறிவிட்டார் என்று துணை முதல்வர் பவன் கல்யாணே தெளிவுப்படுத்திவிட்டார். வெறும் 120 நாட்களில் பெண்கள் மீதான தாக்குதல்கள் 100-க்கும் மேற்பட்டவை. இதுபற்றி உள்துறை அமைச்சர் என்ன சொல்லப்போகிறார்? அமைச்சரின் திறமையின்மையை பவன் கல்யாண் சுட்டிக் காட்டியுள்ளார். YSRCP அரசால் கொண்டு வரப்பட்ட திஷா மொபைல் போன் செயலியையோ (பெண்கள் பாதுகாப்புக்காக), பெண்கள் மட்டுமே இருக்கும் காவல் நிலையங்களையோ இந்த அரசு பயன்படுத்தவில்லை. உள்துறை அமைச்சர் பதவி விலகுவாரா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா பதிலளித்துள்ளார். அவர், “ 'குற்றம்சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் கைதுசெய்ய மாட்டீர்களா’ என்று பவன் கல்யாண் என்னிடம் கேட்டார். நான் அவரது கருத்துகளை மிகவும் நேர்மறையாக எடுத்துக்கொண்டேன். உங்களுக்கு என்று முக்கியமான போர்ட்ஃபோலியோ உள்ளது. நீங்கள் இன்னும் ஆக்ரோஷமாக முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். அவருடைய (பவன் கல்யாண்) வார்த்தைகளை விமர்சனமாக பார்க்கவில்லை. அதை ஊக்குவிப்பதாகவே பார்க்கிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை நாங்கள் மாவட்ட வாரியாக மதிப்பாய்வு செய்து வருகிறோம்.
கடந்த ஐந்தாண்டுகளாக காவல் துறை சீர்குலைந்து கிடக்கிறது. இன்று, நான்கூட சமூக ஊடகங்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் மாநிலம் சட்டம் மற்றும் ஒழுங்கின் அடிப்படையில் மிகவும் வலுவாக உள்ளது” என்றார். தொடர்ந்து ரோஜாவின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், ”பவன் கல்யாண் என்னைப் பற்றி ஏதோ சொன்னதில் அவர்கள் (ரோஜா) மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையில் அந்தக் கருத்துகளின் சூழலைப் புரிந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ம.பி: மனைவி முன்பு ‘அங்கிள்’ என அழைப்பு.. கோபத்தில் ஜவுளிக்கடைக்காரரை தாக்கிய நபர்!