இந்தியா

“அன்று கல் எறிந்தவர்கள் இன்று வளர்ச்சிப் பணி செய்கின்றனர்’’- அமித் ஷா பெருமிதம்

“அன்று கல் எறிந்தவர்கள் இன்று வளர்ச்சிப் பணி செய்கின்றனர்’’- அமித் ஷா பெருமிதம்

webteam

கடந்த 8 ஆண்டுகளில் தேச விரோத சக்திகள் ஒடுக்கப்பட்டிருப்பதாகவும், கல் எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இன்று மத்திய அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியப் பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் தேச விரோத சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். கல் எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இன்று மத்திய அரசின் வளர்ச்சித்திட்டப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டின் பாதுகாப்பில் சாதகமான மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தேச விரோத செயல்களில் இருந்து நாடு கிட்டத்தட்ட விடுபட்டுள்ளது. இது அனைத்து நாட்டு மக்களுக்கும் பெருமையும், திருப்தியும் அளிக்கிறது. வட கிழக்கில் சுமார் 70 சதவீத அசம்பாவித சம்பவங்கள் குறைந்திருப்பது அப்பகுதியில் முன்னேற்றத்தின் அறிகுறியாகும். ஜம்மு-காஷ்மீரிலும் இளைஞர்களால் கல்வீச்சு நடந்தது. இன்று அதே இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீரின் ஜனநாயக வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று அப்பகுதியில் உள்ள ஏக்லவ்யா பள்ளிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடிகள் பறக்கின்றன.

நாட்டின் உள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்று நாட்டின் பெரும்பாலான ஹாட்ஸ்பாட்கள் தேசவிரோத நடவடிக்கைகளிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டதாகக் கண்டறியப்பட்டதில் நான் திருப்தி அடைகிறேன்.

தற்போது நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, உறுதியான மன உறுதியுடனும், வேகத்துடனும் நமது இலக்கை நோக்கி நாம் நிச்சயமாக முன்னேறி வருகிறோம் என்று சொல்லலாம். இந்த அனைத்து சாதனைகளுக்கும் அடித்தளமாக நமது நாடு இன்று அடைந்து வருவது நமது ராணுவ வீரர்களின் உச்சபட்ச தியாகத்தால் தான்.

காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை (சிஏபிஎஃப்) வீரர்கள் நாட்டைப் பாதுகாக்கும் வேளையில் மிக உயர்ந்த தியாகம் செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.