இந்தியா

டெல்லி வன்முறை எதிரொலி: அமித்ஷா 12 மணிக்கு ஆலோசனை

டெல்லி வன்முறை எதிரொலி: அமித்ஷா 12 மணிக்கு ஆலோசனை

webteam

டெல்லி வன்முறை எதிரொலியாக இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

அப்பகுதியில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின. கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர், மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். இவர் தவிர கல்வீச்சில் காயமடைந்த பொதுமக்களில் 4 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கலவரத்தில் காயமடைந்த காவல் உயரதிகாரிகள் ஷாதரா, அமித் ஷர்மா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 105 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். காவல்துறையினரையும் அவர் மிரட்டினார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் ஷாரூக் என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபரை பிடித்து டெல்லி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள கலவரத்தை தடுக்கவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜலுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மதியம் 12 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.