இந்தியா

கொரோனா அச்சுறுத்தலால் வணிக வளாகங்களுக்கு விடுமுறை : ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமா?

கொரோனா அச்சுறுத்தலால் வணிக வளாகங்களுக்கு விடுமுறை : ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமா?

webteam

கொரோனா அச்சம் காரணமாக, வணிக வளாகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களுக்கு 50 சதவீத ஊக்கத்தொகை அளிக்க வேண்டியது சட்டப்படி அவசியமாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. உலக அளவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 166 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல்‌ பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்‌ய அறிவுறுத்தியுள்ளன.

அரசின் இந்த பல்வேறுகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வந்தாலும், தங்களது அன்றாட வேலைகளை நம்பி குடும்பத்தை காப்பாற்றி வரும் சாமானியர்களின் வாழ்வில் இது பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

தற்போதுள்ள சூழலில் 31ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த் தொற்றுப் பரவல் எப்போது கட்டுக்குள் வரும், இயல்பு நிலை எப்போது திரும்பும் என பல சாமாணிய ஊழியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும், வணிக வளாகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம், ஊக்கத்தொகை குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு தொழிற்தகராறு சட்டத்தில் பதில் உள்ளது.

தொழில்தகராறு சட்டத்தின்படி, தற்காலிக ஆலை மூடல் நடவடிக்கை மேற்கொண்டால் ஊழியர்களுக்கு 50 சதவிகிதம் ஊக்கத்தொகை அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இதுபோன்ற நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டிருப்பதால், 50 சதவிகிதம் ஊக்கத்தொகை அளிக்க வேண்டுமென்று அரசுகளே அறிவிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.