இந்தியா

அதிகரித்த ஹெச்.ஐ.வி தொற்று... ஊரடங்கு காரணமா?

அதிகரித்த ஹெச்.ஐ.வி தொற்று... ஊரடங்கு காரணமா?

ச. முத்துகிருஷ்ணன்

2020-21 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடு காரணமாக ஹெச்.ஐ.வி தொற்றுக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆர்.டி.ஐ தரவுகள் தெரிவிக்கின்றன.

2020-21 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தேசமும் கொரோனா ஊரடங்கில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அடுத்த தெருவுக்கு செல்வது கூட குற்றமாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து தெருக்களை, வீடுகளை சீல் செய்து வைத்த ஒரு மறக்க முடியாத கால கட்டம் அது. அந்த நெருக்கடியான சூழ்நிலையில் பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடு கணிசமாக நாடு முழுவதும் அதிகரித்ததாகவும், அதன் விளைவாக உயிர்கொல்லியான ஹெச்.ஐ.வி தொற்றுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு அளித்த பதிலில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு காலத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆளானதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேருக்கும், ஆந்திராவில் 9,521 பேரும், கர்நாடகத்தில் 8947 பேரும் ஊரடங்கு காலத்தில் இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு முதல் ஹெச்.ஐ.வி தொற்று எண்ணிகையில் நிலையான சரிவு காணப்பட்டது. 2011-12 இல் 2.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2019-20இல் 1.44 லட்சம் பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில் 85,268 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதியாகி உள்ளது. முந்தைய ஆண்டுகளை விட இது எண்ணிக்கையில் குறைவு எனும் போதிலும், ஊரடங்கில் இவ்வளவு எண்ணிக்கை வரும் என யாரும் எதிர்பார்க்காததால், இந்த எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.