கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்கட்சிகளின் தொடர் கேள்விகளாலும் அமளியாலும் 4 நாட்களாக முடங்கியது. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றியும் மணிப்பூர் கலவரம் பற்றியும் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆளும் தரப்பு இது குறித்து விவாதிக்க தயார் என்று கூறினாலும் பிரதமர் விளக்கமளித்த பின்பே விவாதம் நடைபெறும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் நேற்று காலை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் அறையில் INDIA கூட்டணிக் கட்சிகள் ஆலோசித்தன. முடிவில் மக்களவையில் ஆளும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. இதனைத் தொடர்ந்து நம்பிகையில்லா தீர்மான நோட்டீஸ் ஏற்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதற்கு முன்னர் 2018ஆம் வருடம் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகள் பதிவாயின. மோடி அரசுக்கு ஆதரவாக 330 வாக்குகள் பதிவான நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
அதிக எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லா தீர்மானங்களை சந்தித்த பிரதமர் என்கிற சிறப்பு இந்திரா காந்தியை சேரும். இந்திரா காந்தி 15 நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டு அனைத்தையும் முறியடித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்தது இரண்டு பிரதமர்கள் மட்டுமே. அதில் ஒருவர் 1979ஆம் வருடத்தில் மொரார்ஜி தேசாய்; மற்றொருவர் 1999ஆம் வருடத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய். பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் இல்லை என்பதால் இருவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட பிறகு பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தவர் ஜவஹர்லால் நேரு. 1963ஆம் வருடத்தில் ஆச்சார்ய கிருபளானி உள்ளிட்டோர் இந்தியாவின் முதல் பிரதமருக்கு எதிராக சீனா-இந்தியா போருக்கு பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 1962ஆம் வருட போரில் இந்தியா பின்னடைவை சந்தித்ததால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும் ஜவஹர்லால் நேரு தமது அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்தார்.
ராஜீவ் காந்தி அகால மரணத்துக்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களை சந்தித்தார். இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பாதூர் சாஸ்திரியும் மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
1999ஆம் வருடம் அப்போது ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றதால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்த அடல் பிஹாரி வாஜ்பாய், 2003 ஆம் வருடத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து பெரும்பான்மையை நிரூபித்தார்.
இதற்கிடையே ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானமும் தோல்வியடைந்தது. காங்கிரஸ் அரசுகளே அதிக எண்ணிக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டு முறியடித்துள்ளன. அதேபோல் 10 ஆண்டுகள் பதவியில் இருந்த போதும் இது போன்ற ஒரு நடவடிக்கையையும் எதிர்கொள்ளாத ஒரே பிரதமர் மன்மோகன்சிங் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.