“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ஆல் இந்தியா ரேடியோவின் பெயரை ஆகாஷவாணி என முழுமையாக மாற்றியதற்குப் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஆல் இந்தியா ரேடியோ குறித்தும் அதன் வரலாறு குறித்தும் இந்தத் தொகுப்பில் காணலாம்..
ஆகாஷவாணி செய்திகள் வாசிப்பது என்று குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான அகில இந்திய வானொலியின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். 1923-ஆம் ஆண்டு ஜூன் மாதம், மும்பை ரேடியோ சங்கம் என்ற அமைப்புதான், நாட்டில் முதன்முதலாக வானொலி ஒலிபரப்பை தொடங்கியது. அதன்பிறகு 13 ஆண்டுகள் கழித்து, 1936-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய ஒளிபரப்பு சேவை என்ற பெயரில், தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை கீழ் சோதனை முறையில் வானொலி சேவை தொடங்கப்பட்டது.
அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக கிளை பரப்பத் தொடங்கிய இந்த அமைப்பு, 1936, ஜூன் 8-ஆம் தேதி ஆல் இந்தியா ரேடியோ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் கீழ் 1941-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, திருச்சி, லக்னோ ஆகிய இடங்களில் செயல்பட்டது. பிறகு, செய்திக்கு என்று தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, 1956-ஆம் ஆண்டு ஆகாஷவாணி என்ற புதுப் பெயர் வழங்கப்பட்டது.
இப்படி தொடங்கப்பட்ட இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான ஆல் இந்தியா ரேடியோ, தற்போது 262 வானொலி நிலையங்களுடன், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 92 சதவீதம் பேரைச் சென்றடையும் வகையில் 23 மொழிகளில் இயக்கப்பட்டு மாபெரும் விருட்சமாக எழுந்து நிற்கிறது. தற்போதைய டிஜிட்டல் உலகில் நிலைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 2017-ஆம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்துடன் ஆல் இந்தியா ரேடியோவின் தரம் உயர்த்தப்பட்டது.
இனி, ஆல் இந்தியா ரேடியோ என்ற பெயரில் அல்லாமல் முழுமையாகவே ஆகாஷவாணி என்ற பெயரில் மட்டுமே அழைக்கப்படும் என்ற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் முடிவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த முடிவை திரும்பப் பெறக்கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் மத்திய அரசு ஹிந்தித் திணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆனால், இது குறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.