கெளரி லங்கேஷ் கொலை வழக்கு முகநூல்
இந்தியா

கெளரி லங்கேஷ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இந்துத்துவா அமைப்பு வரவேற்பு... வெளியான அதிர்ச்சி வீடியோ!

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில், பிணை மூலம் சிறையில் இருந்து வெளியே வந்தவர்களை இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

PT WEB

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில், பிணை மூலம் சிறையில் இருந்து வெளியே வந்தவர்களை இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி, ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற தினசரி நாளிதழின் ஆசிரியரான கெளரி லங்கேஷ், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் வெளியே இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு, அதில் 8 பேருக்கு பிணை கிடைத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஒன்பதாம் தேதி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஒன்று, வழக்கில் தொடர்புடைய மேலும் எட்டு நபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

இந்த எட்டு நபர்களில், சிறையில் இருந்து வெளிவந்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் என்ற இருவருக்கு, ’ஸ்ரீ ராம சேனா’ உள்ளிட்ட இந்து அமைப்பினர் மாலையிட்டு வரவேற்பளித்தனர்.

மேலும், உள்ளூர் காளி கோவில் ஒன்றில் இருவரும் வழிபாடு நடத்தி, பின்னர் அருகிலுள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்குச் சென்று மாலையிட்டுள்ளனர். இதுதொடர்பான காணொளி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஸ்ரீ ராம சேனா அமைப்பின் தலைவர் நீல்கந்த கந்தகல், இவ்வழக்கில் சிறையில் ஏழு வருடங்கள் அடைபட்டிருந்தவர்கள் அனைவரும் அப்பாவிகள் என அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபக்கம், கைதான 18 பேரில், 16 பேர் தற்போது பிணையில் வெளியே உள்ளனர்.