இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாகவும் இதன் மூலம் அம்மொழியின் முக்கியத்துவம் கூடும் என்றும் தெரிவித்தார். அமைச்சரவையின் செயல்பாடுகள் 70% இந்தி மொழியிலேயே இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தியை பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும் போது பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.