அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் பங்கு வைத்திருந்ததாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்கு விலைகளை கையாளுதலில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதன் விளைவாக அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
எனினும், அதை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய விஷயம் வரப்போவதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த பதிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் (Madhabi Puri buch) தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தங்கள் எக்ஸ் வலைத்தள கணக்கை செபி லாக் செய்து வைத்துள்ளது. இதற்கிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.