ஹிண்டன்பர்க் எக்ஸ் தளம்
இந்தியா

‘இந்தியாவில் பெரிய சம்பவம் இருக்கு’ - ஹிண்டன்பர்க்கின் அடுத்த பதிவு.. அச்சத்தில் நிறுவனங்கள்!

“விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடைபெற இருக்கிறது” என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம், ஹிண்டன்பர்க் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம், ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம், உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன. 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதுடன், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது.

கெளதம் அதானி

மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் இன்று தனது எக்ஸ் பக்கத்தில், "விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடைபெற இருக்கிறது" என்று பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனம் குறித்த மோசடிகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: டெல்லி | காதலியின் பிறந்த நாள்.. தாயின் நகைகளைத் திருடி ஐபோன் வாங்கிக் கொடுத்த 9ஆம் வகுப்பு மாணவர்!