இமாச்சலபிரதேசம் முகநூல்
இந்தியா

சிம்லா மசூதி விவகாரம் | “சட்டவிரோதமாக கட்டப்பட்டது உறுதியானால் இடிக்கப்படும்” - இமாச்சல் அமைச்சர்

இமாச்சலபிரதேச மாநிலம் ஷிம்லாவில் மசூதியொன்று சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்த நிலையில் போராட்டம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

PT WEB

இமாச்சல பிரதேசத்தில் ஷிம்லா சஞ்சவுலி பகுதியில் விதிமீறி மசூதி கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் இந்து அமைப்பினர் சில தினங்களுக்கு முன்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து சஞ்சவுலி பகுதியில் நேற்று காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இந்து அமைப்பின் போராட்ட அறிவிப்பை கருத்தில் கொண்டு, ஒரே இடத்தில் அனுமதியின்றி ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடைவிதித்தனர் காவல்துறையினர்.

ஷிம்லா மசூதி விவகாரம்

இருப்பினும் நேற்று போராட்டத்திற்காக கூடியவர்கள், தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர், போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த விவகாரத்தில் இமாச்சல் மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர் வலியுறுத்தினார்.

விக்ரமாதித்யா சிங்

இந்நிலையில் இதுபற்றி இமாச்சலின் பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்யா சிங் ஊடகங்களில் பேசுகையில், “இந்த விவகாரம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. விதிமீறல் கட்டடங்கள் கட்டப்படுவதைப் பொறுத்த வரையில், அரசு அதை கவனத்தில் எடுத்துள்ளது. இதுதொடர்பான அனைத்து புகார்களும் சட்டப்படி விசாரிக்கப்படும்.

விசாரணை முடிவில், எந்தவொரு கட்டடம் சட்ட விரோதமானது எனத் தெரிந்தாலும் அது இடிக்கப்படும் என்று நானே சட்டசபையில் கடந்த காலங்களில் கடுமையாக கூறியுள்ளேன். இப்பிரச்னையிலும் நாம் சட்டத்தை முன்னெடுத்தே செல்ல வேண்டும். சட்டம் சொல்வதே நடக்கும். இமாச்சலப் பிரதேசத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். போராட்டாக்காரர்களுக்கு அரசின் அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.

சிம்லா நகராட்சி ஆணையர் (Shimla municipal commissioner) நீதிமன்றம், மசூதியின் கட்டுமானம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தால், அது கண்டிப்பாக இடிக்கப்படும். மாநில அரசு சட்டத்தின் ஆட்சியையே பின்பற்றும்” என்றுள்ளார்