ஆந்திரா Facebook
இந்தியா

ஆந்திரா|கல்லூரி மாணவிகள் விடுதியில் ரகசிய கேமரா|விடிய விடிய நடைபெற்ற போராட்டம்!

ஆந்திராவில் கல்லூரி மாணவிகள் விடுதியில் ரகசிய கேமரா இருந்ததாக கூறப்படும் சம்பவத்தால், விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு மாணவர்களிடையே விசாரணை நடைபெற்று வருகிறது.

PT WEB

ஆந்திராவில் கல்லூரி மாணவிகள் விடுதியில் ரகசிய கேமரா இருந்ததாக கூறப்படும் சம்பவத்தால், விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு மாணவர்களிடையே விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் மாணவிகள் விடுதியின் கழிவறையில், ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதாக சில நாட்களுக்கு முன்பே மாணவிகளுக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரகசிய கேமராக்கள் மூலம் 300 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு, அவை கல்லூரி மாணவர்களிடையே பரப்பப்பட்டுள்ளதாகவும், பணத்திற்காக விற்கப்பட்டுள்ளதாகவும், மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து சென்று விசாரணை நடத்திய காவல்துறையினர், ரகசிய கேமராக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என கூறியுள்ளனர். அதேவேளையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவர்களின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் மாணவிகளின் வீடியோக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிட்டுள்ளார். கொல்கத்தா, திருச்சி, கேரளா, ஆந்திரா என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் தடுக்க, ஒரு சமூகமாக என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியை அவை பெரிதாக எழுப்பியிருக்கின்றன.