இந்தியாவில் நடப்பாண்டு மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட உலக புராதான இடங்களில் தாஜ்மஹால் தான் அதிக வருவாயை ஈட்டி உள்ளது.
நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட உலக புராதான இடங்கள், அதனுடைய சுற்றுலா வருமானம் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு உறுப்பினர் ஒருவர், மக்களவையில் கேட்டிருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ள மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், அஜந்தா எல்லோரா குகைகள், தாஜ்மஹால், மகாபலிபுரம், ஒடிசாவின் சூரிய கோவில், கோவாவில் உள்ள தேவாலயங்கள், ஹரப்பா நகரம் என 24 தொகுப்புகளாக உள்ள இடங்களில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 19 லட்சம் பேர் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ள நிலையில், வருமானமாக சுமார் 20 கோடியே 56 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
தாஜ்மஹாலுக்கு அருகே உள்ள ஆக்ரா கோட்டையில் சுமார் 97 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ள நிலையில், 7 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள குதுப்மினாருக்கு சுமார் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில், 4 கோடியே 15 லட்சம் ரூபாய் வருவாயாக இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மகாபலிபுரம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் 66,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், முப்பது லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முந்தையக் காலகட்டத்தில் மகாபலிபுரம் சுற்றுலா மையம் சுமார் 13 லட்சம் சுற்றுலா பயணிகளையும், சுமார் 7 கோடியே 63 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டிய நிலையில், கொரோனா காலகட்டத்தில் வருவானம் பெரிய அளவில் குறைந்து இருந்தது. கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாகவே சுமார் 4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ஒரு பகுதியிலேயே மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.