delhi meeting ani
இந்தியா

மணிப்பூர் வன்முறை: அமித் ஷா தலைமையில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

Prakash J

மணிப்பூரில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன. ஒன்றரை மாத காலத்துக்கும் மேலாக கலவரம் நீடித்துவரும் நிலையில், கலவரங்களால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

மணிப்பூர் கலவரம்

4 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த மே 29ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் சென்று அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக 4 நாட்கள் தங்கியிருந்து குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருந்தபோதிலும் அங்கு இன்னும் வன்முறை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் மணிப்பூரில் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தன. இந்தச் சூழலில் மணிப்பூர் வன்முறை குறித்துப் பேசுவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அமித் ஷா தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் கூடியது.

delhi meeting

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மணிப்பூரின் முன்னாள் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ பிரைன், மேகாலயா முதலமைச்சர் கான்ராடு சிங், திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் பங்கேற்காததால் இக்கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. இந்தக் கூட்டத்தில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக கட்சிகள் தங்கள் கருத்துகளை எடுத்துக்கூறின. மேலும், மணிப்பூருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்ப கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தலைவர்கள் தெரிவித்தனர்.

“பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூட்டத்தின்போது அமித் ஷா தெரிவித்ததாக பாஜகவின் மணிப்பூர் பொறுப்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. திருச்சி சிவா, “மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி இதுவரை சிறு கவலைகூட தெரிவிக்காததுதான் அதிக சங்கடத்தைத் தருகிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், மணிப்பூரில் கலவரத்தை உடனே கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் பைரோன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் இக்கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் 8 அம்சங்கள் அடங்கிய மனுவையும் அக்கட்சி வழங்கியது. ‘இக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றிருக்க வேண்டும்; அப்போதுதான் அம்மாநில மக்களுக்கு அது நம்பிக்கை அளிப்பதாக இருந்திருக்கும்’ என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.