ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், அம்மாநிலத்தின் 11-ஆவது முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளார்.
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், மாநில ஆளுநர் திரவுபதி முர்முவை சந்தித்து 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில், ராஞ்சியில் உள்ள மோஹ்ராபதி மைதானத்தில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஞ்சி செல்கிறார்.