இந்தியா

ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு

ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு

webteam

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 16 என அதன் கூட்டணி மொத்தமாக 47 இடங்களை கைப்பற்றியது. பாஜக 25 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியது.

இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். இதற்கான பதவியேற்பு விழா வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஹேமந்த் சோரன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு முன்பாக, மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போதும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார். ஸ்டாலினும் அந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அந்த வகையில் தற்போது ஜார்க்காண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.