ஹேமா கமிட்டி அறிக்கை முகநூல்
இந்தியா

ஹேமா கமிட்டி| அறிக்கை வெளியான பிறகும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

PT WEB

செய்தியாளர் ரமேஷ் கண்ணன்

ஹேமா கமிட்டி அறிக்கை

மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள அம்மாநில உயர்நீதிமன்றம், ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Justice Hema

மலையாள படவுலகில் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகள் குறித்து நீதிபதி ஹேமா ஆணையம் தனது அறிக்கையை கேரள அரசிடம் 2019 டிசம்பரில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்த நிலையில், நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு வரையறுக்கப்பட்ட மாற்றங்களுடன் கடந்த மாதம் அறிக்கை வெளியானது.

இது மலையாள திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

அப்போது ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதில் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் கடுமையாக சாடினர். மேலும், ஹேமா கமிட்டி ​​அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை தெரிவிக்குமாறு நீதிபதிகள் கோரினர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், சிறப்பு புலனாய்வுக் குழு இருந்த போதிலும், ஹேமா கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் ஏதேனும் உறுதியான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதா என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

ஊடகங்களுக்கு தங்களை கட்டுப்படுத்த தெரியும்

திரையுலகில் மட்டுமின்றி சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியையும் நீதிபதிகள் முன்வைத்தனர். அமைப்புசாரா துறையில் நடக்கும் பாலியல் சுரண்டலுக்கு முடிவு கட்ட, சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து கேரள அரசின் சிறப்பு புலனாய்வுக்குழு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஹேமா கமிட்டி

முன்னதாக, இந்த விவகாரத்தை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், ஊடகங்களை கட்டுப்படுத்தக் கூடாது என்றும், ஊடகங்களுக்கு தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள தெரியும் என்றும் கூறியது. அதேநேரம், சிறப்பு புலனாய்வுக்குழு செய்தியாளர் சந்திப்பு எதுவும் நடத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.