இந்தியா

4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் - மத்திய அரசின் புதிய விதிமுறை

Veeramani

இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது

இரு சக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டார் வாகனச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை வரும் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கான ஹெல்மெட்டுகளை உற்பத்தி செய்யும்படி அதன் தயாரிப்பாளர்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச்செல்லும் போது 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்ற விதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவை தவிர ஓட்டுநருடன் குழந்தைகளை பாதுகாப்பான வகையில் பிணைக்கும் வகையிலான பட்டையயும் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி நைலான் போன்ற எடை குறைந்த, எளிதாக மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய அதே நேரம் வலுவாக பிணைக்க கூடிய பட்டைகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விதிகளை மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதம் முடக்கி வைக்கவும் புதிய விதி வகை செய்கிறது.