இந்தியா

இறுதிக்கட்ட கேரள உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

இறுதிக்கட்ட கேரள உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

kaleelrahman

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கேரளாவில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 8, 10, 14 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 8-ம் தேதி இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்ட, ஆலப்புழா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 10ம் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் நடந்து முடிந்தது. இந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் வாக்குப்பதிவு 76 சதவீதத்தை கடந்தது.


இந்நிலையில் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலையில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 384 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்கும் இந்த தேர்தலில் 89,74,310 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவிற்காக 10,842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,105 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் வாக்குப்பதிவில் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி ஆகிய கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் இந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். டிசம்பர்16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.