தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை Twitter
இந்தியா

தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை - வட மாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் சூழலில் மகாராஷ்டிரா, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

PT WEB

மும்பை மற்றும் மத்திய மகாராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்காள விரிகுடா கடலோர பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாகவும், குஜராத்தின் கட்ச் பகுதியில் புயல் உருவாகியிருப்பதாலும், மகாராஷ்டிரா முதல் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் வரை மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Monsoon

தவிர தென்மேற்கு பருவமழையும் வேகமெடுத்திருப்பதால் கூடுதலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மிக அரிய நிகழ்வாக தென்மேற்கு பருவமழை டெல்லியிலும் பெய்ததால் கடந்த சில நாட்களாக அங்கு நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதே போல் உத்தராகண்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆறுகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Rain

ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 50 வயது முதியவர் உயிரிழந்தார். இதே போல் கந்த்யால் கிராமத்தில் வயலில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர். இதற்கிடையே பேரிடர் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சார்தாம் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகி, மண்டி பகுதிகளில் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தண்டா என்ற பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாகி, மண்டி பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

rain

மேலும் மோஹல், குலு பகுதியிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றை உள்ளூர் மக்கள் ஜேசிபி உதவியுடன் மீட்டு கரை சேர்த்தனர். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. நயாகராவா அல்லது ஜோக் நீர்வீழ்ச்சியா என கேட்கும் அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.