பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளம இடங்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த மழைநீரால் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஹரித்துவாரில் பெய்த கனமழையால் ரூர்கீ நகரருகே பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். தீவிர தேடுதலுக்கு பிறகு 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெஹ்ரி மாவட்டத்தின் கன்சாலி பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜக்கன்யாலி பகுதியில் உள்ள ஒரு உணவகம் அடித்துச் செல்லப்பட்டது. கன்சாலி-சிர்பிட்டியா நெடுஞ்சாலையை இணைக்கும் பாலம் ஒன்றும் அடித்து செல்லப்பட்டதால வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகள், முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து முடங்கின. மழையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, நாடாளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனிடையே மழையின் காரணமாக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சுமார் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையில், மழையால் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்ஈடுபட்டனர்.
நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்ததால் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுவித்துள்ளது. IMD குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும், தங்கள் வீடுகளைப் பாதுகாக்கவும், தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆகஸ்ட்1ம் தேதி மூடப்படும் என்று தில்லி கல்வி அமைச்சர் அதிஷி புதன்கிழமை அறிவித்துள்ளார். டெல்லியில் மட்டுமின்றி நொய்டா விலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் விவரித்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் மழை பாதிப்புக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காணாமல்போயுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 2 நீர்மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, குலு பகுதியில், பார்வதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, கரையோரம் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. ஆற்றில் கட்டடம் விழுந்து அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் பதைபதைக்கும் வகையில்உள்ளன.
இதற்கிடையே,சாலைகள் சேதமடைந்துள்ளதால், மீட்புப் பணிகள் மிகவும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ திபெத்திய எல்லை காவல்படையினர், காவல்துறையினர் என நூற்றுக்கணக்கானோர் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிமாச்சலில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.