குஜராத் கனமழை - சாலையில் ஏற்பட்ட தீடீர் பள்ளம் ட்விட்டர்
இந்தியா

வெளுத்து வாங்கிய கனமழை; சாலை உடைந்து உள்வாங்கியதால் வெள்ளாக்காடாக காட்சியளிக்கும் குஜராத்!

PT WEB

குஜராத் மாநிலத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அகமதாபாத், காந்திநகரில் இடைவிடாமல் பெய்த மழையால் திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

குறிப்பாக அகமதாபாத்தின் அல்காபுரி, நாரன்புரா பகுதி வீதிகளில், முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் சூழ்ந்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. அங்குள்ள கே.கே.நகரில் மரம் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்தன.

அகமதாபாத் கனமழை

ரயில்வே சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கனமழையால் அகமதாபாத் நகரே வெள்ளத்தில் தத்தளிக்க மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக, சாலை உடைந்து உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஷேலா என்ற பகுதியில் கனமழை கொட்டியது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே, பரபரப்பான போக்குவரத்து சாலை, திடீரென பூகம்பம் ஏற்பட்டதை போல் சுமார் 50 அடிக்கு நீளம், 20 அடி அகலத்தில் உள்வாங்கியது.

திடீர் பள்ளத்தின் ஆழம் சுமார் 30 அடிக்கும் மேல் இருக்கும் என்பதால், அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உறைந்தனர். வாகன ஓட்டிகள் பெரும் கூச்சல் எழுப்பினர். இதனிடையே, பாதாள சாக்கடை பணி செய்த ஒப்பந்தாரர் உள்ளிட்டோர் மீது நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.