இந்தியா

மும்பையில் வெளுத்துவாங்கும் மழை: நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை

webteam

மும்பையில் மழைக்காலம் என்பதும் வழக்கமான எதிர்பார்ப்பாக மாறிவிட்டது. திங்களன்று மும்பை நகரத்தில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 வரையில் அதிகபட்சமாக 38.2 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் அதிக மழை பெய்யும் எனவும், அடுத்த 24 மணி 204.5 மி.மீ மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மும்பை, தானே, ரெய்காட் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.  மழைநீர் தேங்கி சாலைப் போக்குவரத்து தடைபடலாம் என்றும் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

“மும்பையில் கொங்கன் துறைமுகம் உள்பட சில பகுதிகளில் லேசானது முதல் கனமானது வரை திங்களன்று மழை பெய்யத் தொடங்கியது. வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால், நாளை மற்றும் புதன்கிழமையன்று பலத்தமழை பெய்யக்கூடும். இதனால் மேற்குக்கடற்கரையோரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை இருக்கும்” என்று மும்பை  வானிலை மைய அதிகாரி ஹொசாலிகர் தெரிவித்தார்.