வானிலை ஆய்வு மையம் முகநூல்
இந்தியா

கொட்டி தீர்க்கத் போகும் கனமழை முதல் வெளுத்த வாங்கவுள்ள கோடை வெயில் வரை!

PT WEB

தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருத்தணி, வேலூர், திருப்பத்தூர், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், பரங்கிபேட்டை ஆகிய இடங்களில் நேற்று வெயில் சதமடித்தது. புதுச்சேரியிலும் 100 டிகிரி வெப்பம் பதிவானது.

அதிகளவாக சென்னை மீனம்பாக்கத்தில் 106.34 பாரன்ஹீட் வெயில் பதிவானது. வங்கக்கடலில் உருவான புயல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களாக வெயில் தமிழ்நாட்டில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், 2 முதல் 3 டிகிரி அளவிற்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கலாம் என கூறப்படும் சூழலில், கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மண்சரிவு போன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.