கனமழை ட்விட்டர்
இந்தியா

தமிழக மக்களுக்கு GOOD NEWS.. கொட்டித்தீர்க்க காத்திருக்கும் கனமழை!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் கணித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் நகர்வை பொறுத்து தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

வெப்ப சலன மழை என்பது தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகமாக பெய்யும். ஆனால், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

அதேநேரம், தமிழகத்தில் வரும் 15 முதல் 20 ஆம் தேதி வரை ஆங்காங்கே மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வடகடலோர பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும், நாகை புதுச்சேரி பகுதிகளில் வருகிற 18, 19 ஆம் தேதிகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், 5 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, “வருகிற 19 ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உள்ளது. இதனால், மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ கேரளா, தமிழகத்தில் பருவமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், இம்மழை இயல்பைவிட அதிகளவு பதிவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல் நினோ காரணமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவில் மழை பொழிவு அதிகரித்து, தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, கோவை மாவட்டம் மக்கினாம்பட்டியில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் பொள்ளாச்சி, தூத்துக்குடி துறைமுகத்தில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஆழியாறு, ஸ்ரீவில்லிப்புதூர், நத்தம், வீரப்பாண்டியில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் வரும் காலங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.