இந்தியா

மருத்துவ தம்பதிகளின் ‘பாசப் பரிமாற்றம்’ : கொரோனா யுத்தத்தில் நெகிழ்ச்சி !

மருத்துவ தம்பதிகளின் ‘பாசப் பரிமாற்றம்’ : கொரோனா யுத்தத்தில் நெகிழ்ச்சி !

webteam

கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் மருத்துவ தம்பதியினரின் பாசப் பரிமாற்றப் புகைப்படம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

மனித இனத்திற்கே பேராபத்தாக வந்திருக்கும் கொரோனா அரக்கனுக்கு எதிராக போர் செய்து கொண்டிருக்கும் வீரர்களில் முதல் வரிசையில் நிற்பவர்கள் மருத்துவர்கள் தான். கொரோனா அறிகுறி ஒரு நபருக்கு இருந்தாலே அவரிடம் இருந்து விலகி இருங்கள் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரையே அரவணைத்து, அவருக்கு அருகே இருந்து சிகிச்சை அளிப்பது எப்பேற்பட்ட தியாகம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய மருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் மரியாதைகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் சீனாவில் நிறைய உண்டு. இந்தியாவில் பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகின்றன. பல மருத்துவர்கள் குடும்பத்தைவிட்டு கொரோனாவிற்கு எதிரான போரில் களத்தில் உள்ளனர். அவ்வாறு இரவு, பகல் பாராமல் போரிடும் மருத்துவர்களுக்கு கண்ணாடி முகக்கவசங்களால் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்கள் வைரலாகியிருந்தன. மேலும், அனைவரது மனதையும் கலங்கச் செய்திருந்தன.

அந்த வகையில் தற்போது ஒரு மருத்துவ தம்பதியினரின் புகைப்படம் அனைவரையும் உருகச் செய்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக போரிட்டு வரும் அந்த தம்பதியினர் முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கொரோனா தடுப்பு உடைகளை அணிந்துகொண்டு ஒருவர் முகத்தில் மற்றொருவர் கை வைத்தபடி, பாசத்துடன் பார்க்கின்றனர். இந்த கொரோனா போர் எப்போது முடியும் ? நாம் இருப்பமோ அல்லது போரில் உயிர்த்தியாகம் செய்வோமோ என்பது போல இருக்கிறது அவர்களின் பார்வை. இதுமட்டுமில்லாமல் இன்னும் எத்தனையோ கதைகளை அந்தப் புகைப்படம் சொல்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகிறது.