உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள தாலியா நாக்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாஜிம். இவரது மகள் சோபியா (5). சோபியா, கடந்த 23ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நாஜிம், தன் மகளை பதாவுனில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை. இதற்கிடையே காய்ச்சலால் துடித்த சிறுமி பரிதாபமாக இறந்திருக்கிறார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் நாஜிம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை நாஜிம் உள்ளூர் ஊடகங்களிடம் கூறுகையில், “அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்றுவிட்டனர். உதவிக்காக பலமுறை அவர்களிடம் கெஞ்சியும் எனது மகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்படவில்லை. ‘குழந்தை மருத்துவர் யாரும் இல்லை’ எனத் தெரிவித்தனர். மருத்துவர்கள் அல்லது ஊழியர்கள் இல்லாத பல அறைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டோம். இதன்காரணமாகவே எனது மகள் இறந்துவிட்டார்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அருண் குமார், “குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மூன்று டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், புறநோயாளிப் பிரிவில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் யாரும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் விடுமுறையில் இருந்தவர்கள் மட்டும் விளையாட்டில் பங்கேற்றிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், சம்பவத்தின்போது, சில மருத்துவர்கள் தங்கள் கடமையை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அலட்சியத்தால், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2 ஒப்பந்த டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 அரசு டாக்டர்கள் ஒரு மாத காலத்திற்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.