இந்தியா

”2 வருடம் தாங்க முடியாத கொடுமை”: ஏமனில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் கதறல்கள்

”2 வருடம் தாங்க முடியாத கொடுமை”: ஏமனில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் கதறல்கள்

webteam

கொலை வழக்கு சுமத்தப்பட்ட கேரள பெண் ஒருவருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமனில் கிளினிக் நடத்திக்கொண்டிருந்த நிமிஷா, கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். அவருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை அளித்ததைத் தொடர்ந்து அவர் தற்போது கேரள மற்றும் இந்திய தூதகரத்திடம் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கேரளப்பகுதியைச் சேர்ந்த தம்பதி நிமிஷா மற்றும் தாமஸ். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. நிமிஷா ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். தாமஸ் ஒரு தினக் கூலி. குழந்தைப் பிறந்தவுடன் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட நிமிஷா, தனது கணவர் தாமஸிடம் ஏமன் நாட்டில் நாம் சொந்தமாக ஒரு கிளினிக் தொடங்கலாம் எனக் கூறியுள்ளார்.  அதற்கான பணம் மற்றும் விசாவிற்கு என்ன செய்வது என தாமஸ் கேட்க, அதற்கு நிமிஷா துணிக்கடை உரிமையாளர் தலால் அப்தோ மஹ்தி என்பவரின் பெயரை பரிந்துரைத்து அவர் உதவுவார் என்று கூறியுள்ளார்.

ஆனால் நிமிஷா தலாலிடம் உதவிக்கேட்க வில்லை. மாறாக அவர் பணியாற்றி வந்த மருத்துவமனை மருத்துவர் அப்துல் லதீரிடம் ஏமனில் புதிய கிளினிக் தொடங்குவது தொடர்பாக விவரித்து உதவி கேட்டுள்ளார். முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அதன் பின்னர் புதிய கிளினிக் தொடங்குவதற்கு உதவி செய்வதாகக் கூறி, அதற்கான முதலீடு பணத்தில் 33 சதவீதத்தை வழங்கியுள்ளார். அதன் பின்னர்  தலாலை அனுகிய நிமிஷா, உதவி தேவையில்லை எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏமனில் ஒரு கிளினிக்கை தொடங்கினார் நிமிஷா. ஏமனில் தனியாக கிளினிக் நடத்தி வந்த நிமிஷாவிற்கு, அங்கிருந்த  தலால் சில உதவிகளை செய்ததாகக் கூறப்படுகிறது. கிளினிக் நன்றாக இயங்கி கொண்டிருக்க ஒரு முறை விடுமுறை நாட்களில் தலாலுடன் நிமிஷா கேரளாவுக்கு வந்துள்ளார். நிமிஷாவின் கணவருடன் நன்றாக பழகிய தலால் அவருடன் இணைந்து கேரளாவின் பல இடங்களைச் சுற்றிப்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.

(தாமஸ் உடன் நிமிஷா)

அதன் பின்னர் நிமிஷாவும், தலாலும் ஏமனுக்குச் சென்றதாகத் தெரிகிறது. அதன் பின்னர் ஏமனுக்கு தனது குழந்தையுடன் செல்லத் திட்டமிட்டிருந்த நிமிஷாவின் கணவரால் அப்போது ஏமனில் நடைபெற்ற உள் நாட்டு போரின் காரணமாக அங்குச் செல்ல முடியவில்லை. இதனிடையே கிளினிக்கில் வந்த வருமானத்தை பார்த்து வாய் பிளந்த தலால், கிளினிக்கில் வருமானத்தில் பங்கு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளினிக் தொடர்பான விஷயங்களில் அதிக உரிமையை எடுத்துக் கொண்ட அவர், அவரது பெயரில் கிளினிக்கிற்கு இரு வாகனங்களையும் வாங்கியுள்ளார்.

(தலால்)

இந்த விஷயம் நிமிஷாவிற்கு தெரிய வர, கிளினிக் மேலாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது மேலாளர் தலால் நிமிஷாவின் கணவர் என்று கூறி இவ்வாறு செய்யச் சொன்னதாகக் கூறியுள்ளார். இது குறித்து நிமிஷா தலாலிடம் வினவ அவர் தனிப் பெண்ணால் இவற்றை எப்படி நிர்வகிக்க முடியும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்தேன் என்று விளக்கமளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாதம் மாதம் வருமானத்தில் பங்கு எடுத்துக்கொண்டு வந்த தலாலால் வேதனையடைந்த நிமிஷா தலாலின் தந்தையிடம் இது குறித்து கூறியுள்ளார். அதற்கு தலாலின் தந்தை நீங்கள் திருமணம் செய்து கொண்டதாக தலால் கூறி, அது சம்பந்தமான புகைப்படம் குறித்தும் கூறியதாக தெரிகிறது. இது குறித்து நிமிஷா விசாரிக்க, கேரளா வந்த போது நிமிஷாவின் திருமணப் புகைப்படங்களை பார்வையிட்ட தலால் அதில் இருந்த புகைப்படத்தை எடுத்து, அதை மார்பிங் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை நம்ப வைத்தது தெரிய வந்தது.

(தலாலுடன் நிமிஷா)

இதனால் வேதனையடைந்த நிமிஷா ஏமன் சனா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏமன் நாட்டு விதிப்படி புகாரை எழுப்பிய நிமிஷாவும், தலாலுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட 16 நாட்கள் சிறையில் இருந்துள்ளனர். அதன் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதி மன்றத்தில் தலால் தான் தயாரித்த போலி திருமணச் சான்றிதழை காண்பித்ததாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 

அதன் பின்னர் நிமிஷாவின் பாஸ் போர்டை முடக்கிய தலால், அவரிடம் முறை தவறியும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு முறை மருத்துவமனையில் வைத்து நிமிஷாவை கடுமையாகத் தாக்கிய தலால் அவரின் முகத்தில் எச்சில் உமிழ்ந்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் நிமிஷா மறுமுறையும் தலால் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு பல முறை நிமிஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் தலால் பல முறை சிறைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. 

 ஒரு கட்டத்தில் நிமிஷாவிற்கு சொல்ல முடியாத தொல்லைகளை கொடுத்த தலால் தனது நண்பர்களின் பாலியல் இச்சைக்கும் நிமிஷாவை இணங்க வலியுறுத்தியுள்ளார். இதனால் பல இரவுகள் அவர்களிடம் தப்பித்து இரவு தெருவில் சுற்றித்திருந்திருக்கிறார் நிமிஷா. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த நிமிஷா தலாலிடம் இருந்து தப்பிக்க அவரிடம் இருந்து எவ்வாறாவது பாஸ்போர்டை வாங்கி விட வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

 அதற்கு அவரிடம் சிகிச்சைப் பெற்று வந்த சிறைக் காப்பாளர் ஒருவர் அவரை மயக்கமுறச் செய்து அதனை எடுத்து விடுங்கள் எனக் கூற நிமிஷாவும் அதனைச் செய்ய முடிவெடுத்துள்ளார். அதற்கான வாய்ப்பை எதிர் நோக்கிக் கொண்டிருந்த நிமிஷா, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் போதைப்பொருள் உட்கொண்டு வீட்டிற்கு வந்த தலாலுக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார். இதில் கீழே விழுந்து கத்திய தலால் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனைக் கண்டு பதட்டமடைந்த நிமிஷா அவரது நண்பர் ஹனானை தொடர்பு கொண்ட நிமிஷா தொலைப்பேசியில் நடந்த விஷயத்தைக் கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஹனான் திலாலின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் கிணற்றுக்குள் போட்டு மூடியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஹனானுக்கு ஆயுள் தண்டனையும், நிமிஷாவிற்கு மரண தண்டனையும் விதித்தது.

இது குறித்து நிமிஷா கூறும் போது “ திருமணச் சான்றிதழில் எனது பெயருக்கு மாற்றாக முஸ்லீம் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை எனது பாஸ்போர்ட்டுடம் ஒப்பிட்டு உண்மை விவரங்களை வெளிக்கொணர முடியும். ஆனால் மேல் முறையீடு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சரிவர நீதிமன்றத்தில் ஆஜாராக வில்லை. இதனால்  தற்போது தன் தரப்பு வாதங்களை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறினார்.

கேரள அரசும், இந்தியத் தூதரகமும் அவருக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக அவரால் அங்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் இருந்து நிமிஷாவை விடுவிக்க தலாலின் குடும்பத்தினர் 70 லட்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய தூதகரத்தின் சார்பில் நிமிஷாவிற்காக பணியமர்த்தப்பட்டுள்ள வழக்கறிஞர் பாலசுப்பிர மணியன் கூறும் போது “ கடந்த 2019 ஆம் ஆண்டு நிமிஷாவிற்காக வாதாடுவதற்கான உத்தரவு வந்தது. டிசம்பர் 22 ஆம் தேதி வழக்குக்கான இறுதி தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால் எங்களுக்கு கால அவகாசம் குறைவாக இருந்ததால், ஏமன் அரசிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தோம். அதற்குள்ளாக கொரோனா பரவல் வந்து விட்டது. வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் குணமடைந்த நேரத்தில் இந்தியா ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. இதனால் என்னால் அங்கு செல்ல முடிய வில்லை என்று கூறினார்

விரைவில் நிமிஷா தனது மரண தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளார். அதற்கான அத்துனை அனுமதிகளையும் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ள பாலச்சுப்பிரமணியனும் நிமிஷாவை சந்திக்க உள்ளார்.