இந்தியா

36 வருடங்களுக்குப் பிறகு இணைந்த 90 வயது தம்பதி - ஒரு நிஜக் காதல் கதை

36 வருடங்களுக்குப் பிறகு இணைந்த 90 வயது தம்பதி - ஒரு நிஜக் காதல் கதை

rajakannan

வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் பிரிந்தவர்கள் மீண்டும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒன்றுசேர்ந்த பல செய்திகளை நாம் பார்த்து வருகின்றோம். அந்தவகையில் ஒரு உருக்கமான நிகழ்வு கேரளாவில் நிகழ்ந்துள்ளது. 

வெளிச்சம் தந்த வெளிச்சம்:

கேரளாவில் உள்ள முதியோர் இல்லத்திற்கு கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சையது என்ற முதியவர் கொண்டு வரப்பட்டார். முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர் அப்துல் கரீம், முதியவர் சையதிடம் அவரைப் பற்றிய தகவல்களை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் இருந்த அறையின் கதவினை திறந்துகொண்டு வயதான பாட்டி ஒருவர் உள்ளே வருகிறார். தனக்கு நீண்ட நாட்கள் அறிமுகமான நெருக்கமான ஒரு குரல் கேட்கிறதே என ஆவலுடன் பக்கத்து அறையில் இருந்து அங்கு சென்றார்.

உள்ளே அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும் அந்தப் பாட்டிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது. அது ஆனந்த பெருமூச்சு. முதியவர் சையதை பார்த்ததும் அவர் உறைந்து போய்விட்டார். சையதும் அந்த பாட்டியை கண்கொட்டாமல் அதிர்ச்சியுடன் பார்த்தார். 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் போது, சுபத்ரா பாட்டிக்கு 88 வயது, சையதுக்கு 90 வயது. அவர்கள் இணைந்தது திரிச்சூரின் கொடுங்கல்லூரில் வெளிச்சம் என்ற முதியோர் இல்லத்தில். 

இதனைக் கண்ட பொறுப்பாளர் கரீமுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் இருவரையும் பார்த்து ஒருவருக்கொருவர் ஏற்கனவே தெரியுமா என கரீம் கேட்கிறார். அதற்கு, “எனக்கு அவரைத் தெரியும் என்றா கேட்கிறீர்கள்?. அவர்தான் என்னுடைய கணவர்” என்று பளிச்சென்று பாட்டி சுபத்ரா கூறினார். 36 வருடங்களுக்குப் பிறகு கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும். அதுவும் எந்த உதவியும் அற்ற அந்தத் தள்ளாத வயதில். இருவருக்கும் விவரிக்க முடியாத ஆனந்தம்.

அவர்கள் இருவரும் முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தது தனித்தனி கதை. மருத்துவமனை ஒன்றில் சுபத்ரா பாட்டி சிகிச்சை பெற்று வந்துள்ளார். யாரும் அவரைக் கவனிக்க வராததால் அவரை போலீசார் அழைத்து வந்து முதியோர் இல்லத்தில் விட்டனர். யாருமற்ற அனாதையாக கடை ஒன்றில் படுத்துக்கிடந்த சையது தாத்தாவை முதியோர் இல்லத்துக்கு கொண்டு வந்தனர். இவர்களது கதையை நியூஸ் மினிட் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பொறுப்பாளர் கரீம் விரிவாக கூறியுள்ளார்.

இளம் வயதில் விதவை..

இவர்களுடைய திருமண வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அழகானது. முற்போக்கானது. சுபத்ரா பாட்டி தன்னுடைய இளம் வயதில் ஒரு டீன்ஏஜ் வாலிபரை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு பெண், ஒரு ஆண். ஆனால், அவருடைய கணவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிடுகிறார். இரண்டு குழந்தைகளுடன் தந்தையின் வீட்டில் தஞ்சம் அடைகிறார் சுபத்ரா. அவருடைய தந்தையின் நண்பர்தான் சைய்து. 

சுபத்ரா வீட்டிற்கு சையத் அடிக்கடி வந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் சையதை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தன்னுடைய தந்தையிடம் சுபத்ரா கூறுகிறார். தந்தையின் ஆசிர்வாதத்துடன் அவர்களது திருமணம் நடந்தது. அது ஒரு பதிவு திருமணம். அப்போது சுபத்ராவுக்கு வயது 23. சுபத்ராவும், சையதும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதனால், அது ஒரு ‘இண்டெர் காஸ்ட்’ திருமணம் (inter-caste marriage). அவர்கள் இருவரும் 29 வருடம் இணைந்து வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

29 வருட வாழ்க்கைக்கு பின் பிரிவு

அப்போது, சுபத்ராவுக்கு 54 வயது. அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிடுகிறது. ஆனால்,  சொந்த தயவில் வாழ வேண்டிய நிலையில் சையது - சுபத்ரா தம்பதி இருந்தனர். சையது வேலை தேடி கேரளாவை விட்டே வெளியே செல்கிறார். வட இந்தியாவிற்கு சென்று வேலை தேடிய அவர் ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகிறார். அவரால் திரும்பி வரவே முடியவில்லை. இளம் வயதில் முதல் கணவனை இழந்த தருணத்தில் முதல் சோதனையை சந்தித்த சுபத்ராவுக்கு, இது இரண்டாவது சோதனைக்காலம். இருவரும் தொடர்பு கொள்ளவும் முடியாமல் போனது. அன்றைக்கு இருவரிடமும் செல்போன் கிடையாது. அதேபோல், உறவினர்கள் என்று கூட அவர்களுக்கு யாரும் கிடையாது.

சுபத்ராவை தொடர்ந்த துயரக் கதை

அத்துடன், வாழ்க்கையின் துயரம் சுபத்ராவை விட்டுவிடவில்லை. சையது திரும்பி வராதநிலையில் கொஞ்ச காலம் தன்னுடைய பிள்ளைகள் வீட்டில் காலம் தள்ளிக் கொண்டிருந்தார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் மகன், மகள் இருவரும் இறந்துவிட்டார்கள். அப்போது, தன்னுடைய வாழ்க்கையை தானே பார்த்துக் கொள்ளும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். சிறிது காலம் இறால்களை விற்பனை செய்து வந்தார். தெரிந்த சிலரது வீடுகளில் அவர் வசித்து வந்தார். ஆனாலும் வாழ்க்கை அப்படியே செல்லவில்லை. மீண்டும் துன்பம் நோயின் வடிவில் அவரைத் துரத்தியது. கொஞ்சம் ஓடியாடி வேலை செய்து வந்த காலத்தில் அடைக்கலம் கொடுத்தவர்கள் கூட உடல்நிலை சரியில்லாத நேரத்தில் முகம்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். 

தங்க இடமின்றி வெளியில் கிடைத்த இடங்களில் தூங்கினார் சுபத்ரா. அப்போது அவருக்கு வயதாகி விட்டது. நோயும் அவரை பாடாய் படுத்தியது. கோயில் ஒன்றில் படுத்துக்கிடந்த அவருக்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துவிடுகிறது. அவரை மருத்துவமனையில் வைத்து பார்க்கத்தான் யாரும் இல்லையே. யாரோ ஒருவர் பரிதாபப்பட்டு அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடுகிறார். ஆனால், அவர் கேட்பாரற்று மருத்துவமனையில் இருந்திருக்கிறார். மருத்துவமனையில் இருந்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். போலீசார் அவரை வெளிச்சம் முதியோர் இல்லத்திற்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.

தள்ளாத வயதில் இணைந்த இதயங்கள்

மருத்துவமனையில் சுபத்ரா இருந்த நேரத்தில் அவரைத் தேடி சையது கொடுங்கல்லூர் வந்துள்ளார். கொடுங்கல்லூர் முழுவதும் எங்கெங்கோ தேடித் தேடி அலைந்திருக்கிறார். ஆனால், அவர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அவருக்கும் வயது முதிர்ந்துவிட்டது அல்லவா. அதிகம் அலைய முடியவில்லை. ஒருநாள் கடை ஒன்றின் படிக்கட்டுகளில் படுத்து உறங்கிவிடுகிறார். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து சென்றனர். விசாரித்துவிட்டு அந்த வெளிச்சம் முதியோர் இல்லத்திற்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். 

36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களது வாழ்க்கை ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்துவிட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் அவர்கள் உயிரோடு இருக்கப்போகிறார்கள் என்று தெரியாது. ஆனால், மீண்டும் ஒன்று சேர்ந்தது அவர்களது வாழ்க்கையின் அர்த்தத்தை நிறைவு செய்துவிட்டது. அந்த முதியோர் இல்லத்தில் இருந்த பீவது(85) அதை இப்படி அழகாக கூறுகிறார், “இறந்தாலும்.. வாழ்ந்தாலும் இருவரும் இனி ஒரே இடத்தில்தான்”. உண்மையில் அந்தத் தள்ளாத வயதில் இருந்த இருவரின் இறுதிக்கட்டதில் அந்த முதியோர் இல்லம் ‘வெளிச்சம்’ பாய்ச்சித்தான் இருக்கிறது.

courtesy - The News Minute