இந்தியா

யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவிக்கு சிக்கல்

Rasus

எம்பி பதவிகளை ராஜினாமா செய்யாததால் உத்தரப்பிரதேச முதலமைச்சர் பதவியிலிருந்து யோகி ஆதித்யாநாத் மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரை தகுதி நிக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட மனு குறித்து விளக்கமளிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில அமைச்சர்களாக பதவி வகிக்க முடியாது என்று அரசியல் சாசனம் கூறும்போது, கோரக்பூர் தொகுதி எம்பியான யோகி ஆதித்யாநாத் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதி எம்பியான கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரது மாநில அரசு நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சஞ்சய் ஷர்மா உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுதீர் அகர்வால் மற்றும் விரேந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அசோக் மேத்தா மற்றும் உத்தரப்பிரதேச அரசு தலைமை வழக்கறிஞர் ராகவேந்திர சிங் ஆகியோர் ஆஜராகினர். இந்த மனு தொடர்பான அவர்கள் தரப்பு வாதத்தினை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது அரசியல் சாசனம் குறித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதத்தினை கேட்காமல் முடிவெடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.