Acharya Azad Singh Arya  twitter
இந்தியா

“இந்துக்கள் துப்பாக்கியை எடுங்கள்” - ஹரியானா ஆச்சார்யா ஆசாத் வெறுப்பு பேச்சு!

ஹரியானாவில் வெறுப்பு பேச்சுக்கு தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

கடந்த ஜூலை 31ஆம் தேதி ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியில் மத வன்முறை வெடித்தது. தொடர்ந்து குர்கான், மேவாட், பானிபட் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வன்முறை பரவிய நிலையில், பல்வேறு பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஹரியானா மாநிலம் பல்வாலில் உள்ள பாண்டிரி என்ற கிராமத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மகாபஞ்சாயத்தின் 2வது கூட்டம் நேற்று நடைபெற்றது. பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்ட இக்கூட்டத்தில் வெறுப்பு பேச்சுக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

Haryana mahapanchayat

இந்நிலையில் இக்கூட்டத்தில், ஜூலை மாதம் வகுப்புவாத வன்முறைக்குப் பிறகு சீர்குலைந்த வி.ஹெச்.பியின் பிரஜ் மண்டல் யாத்திரையை ஆகஸ்ட் 28 அன்று மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. மேலும், நூஹ் மாவட்டத்தை அருகிலுள்ள பல்வால் மற்றும் குருகிராம் மாவட்டங்களுடன் இணைக்க வேண்டும் என்றும், இந்துக்களின் கடைகள் மற்றும் வீடுகளின் இழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் மகாபஞ்சாயத் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதேநேரத்தில் இக்கூட்டத்தில் பேசிய ஹரியானா கௌ ரக்‌ஷக் தளத்தின் மூத்த உறுப்பினர் ஆச்சார்யா ஆசாத் சிங் ஆர்யா, ’செய் அல்லது செத்து மடி’ என்று கூறி இளைஞர்களை ஆயுதம் ஏந்துமாறு போலீசார் முன்னிலையில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர், “மேவாட் இந்துக்களும், அருகே உள்ள கிராமத்தினரும் குறைந்தது 100 ஆயுதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆயுதங்களில் நீங்கள் ரிவால்வர் துப்பாக்கிக்குப் பதிலாக ரைபிள் துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், ரிவால்வர்கள் மூலம் துல்லியமாகக் குறி பார்க்க முடியாது. எஃப்.ஐ.ஆர் குறித்து இளைஞர்கள் பயப்பட வேண்டாம். எப்ஐஆர்களைக் கண்டு நாம் பயப்படக் கூடாது. என் மீதும் எஃப்.ஐ.ஆர்கள் உள்ளன” எனப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூலை 31அன்று ஹரியானாவில் நடைபெற்ற இருதரப்பு மோதலின்போது இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு மதகுரு உட்பட ஆறு பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றுமைக்கு எதிராக பேசிய இவரது பேச்சுக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.