இந்தியா

ஹத்ராஸ் சம்பவம் : சிங்கப் பெண்களாக சீறிய செய்தியாளர்கள்..!

ஹத்ராஸ் சம்பவம் : சிங்கப் பெண்களாக சீறிய செய்தியாளர்கள்..!

webteam

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர தாக்குதலால் உயிரிழந்த பட்டியலினப் பெண்ணின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற அரசியல் தலைவர்கள் காவலர்களால் கடுமையாக நடத்தப்பட்டனர். அத்துடன் இறந்த பெண்ணின் குடும்பத்தார் உள்ள பகுதியில் ஒன்றரை கிலோமீட்டருக்கு முன்பாகவே அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அத்துடன் அந்த பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலியான பெண்ணின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனால் அந்தப் பகுதிக்கு யாரும் செல்லமுடியாத சூழல் இருக்கிறது.

இந்த சூழலுக்கு இடையிலும் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் தையரித்திற்கு உதாரணமாக அங்கு சென்று செய்தி சேகரித்துள்ளனர். இந்தியா டுடே ஊடகத்தின் செய்தியாளரான தனுஸ்ரீ பாண்டே என்ற பெண் பத்திரிகையாளர் கடந்த 30ஆம் தேதி ஹத்ராஸில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் எரியூட்டப்பட்ட இடத்திற்கு சென்றிருக்கிறார். காவல்துறையினர் இறந்த பெண்ணின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே வரமுடியாத வகையில் அடைத்து வைத்துக்கொண்டு, யாரிடமும் உரிய தகவல் கொடுக்கமால் உடலை எரிப்பதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கான காட்சிகளையும் அவர் வெளியிட்டிருந்தார். அத்துடன் அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரியிடம் துளியும் அச்சமின்றி சரமாரியான கேள்விகளை அவர் முன் வைத்திருந்தார்.

இதேபோன்று இந்தியா டுடே இணை ஆசிரியர் சித்ரா திரிபாதி, ஹத்ராஸ் வழக்கை கையாளும் உத்தரப் பிரதேச போலீசார் மற்றும் துணை மண்டல மாஜிஸ்திரேட் ஆகியோரிடம் தைரியமாக களத்திற்கு சென்று கேள்விகளை முன்வைத்திருந்தார். அப்போது காவல்துறையினர் பேச மறுத்ததுடன், அங்கிருந்த மாஜிஸ்திரேட் சித்ரா திரிபாதியை அவமதிப்பு செய்திருக்கிறார். ஆனால் தனது துணிச்சலில் இருந்து பின்வாங்காமல் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்கு உரக்க கேள்விகளை முன்வைத்திருந்தார்.

இதுதவிர ஏபிபி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் கேள்விகளை முன்வைத்தார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை நோக்கி அவர் செல்ல முயன்றார். அப்போது அவரை அங்கிருந்த காவலர்கள் தடுக்க, அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து முன்னேறிச் அப்பெண் பத்திரிகையாளர் சென்றுகொண்டிருந்தார். ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்படும் இடத்தில், சிங்கப் பெண்களாக குரல் கொடுத்த பெண் பத்திரிகையாளர்களை பலரும் பாராட்டியுள்ளனர்.