ோலே பாபா கோப்பு படம்
இந்தியா

‘விரைவில் பிரளயம் வரும்’ - கான்ஸ்டபிள் To 121 பேர் பலியான கூட்டம்.. போலே பாபா பற்றிய பகீர் பின்னணி!

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சண்முகப் பிரியா . செ

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், போலே பாபாவின் குற்றப் பின்னணி குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த போலே பாபா ? 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவரைக் காண வரக் காரணம் என்ன? விபத்தின் பின்னனி என்ன? இதுவரையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது ? யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்தான விரிவான தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

121 அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு வாங்கிய இந்தக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தரராவ் தாலுகாவில் உள்ள முகல்கடி கிராமத்தில், ’போலே பாபா’ என அழைக்கப்படும் சாமியாரல் நடத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்தபிறகு, போலே பாபா-வின் கால் பாத மண்ணை சேகரிக்க மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய அளவிலானக் கூட்டம் எனக் கூறி ஹாத்ரஸ் மாவட்ட அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படவில்லை. உ.பி காவல்துறை தரப்பில் வெறும் 48 போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்துள்ளனர். கூட்டத்தின் முக்கிய நிர்வாகத்தை போலே பாபாவின் சீடர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். போலே பாபா சீடர்களில் சுமார் 12,500 பேர் கூட்டத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தைவிட்டு போலே பாபா கிளம்பும்போது, அவரிடம் ஆசி பெற்று அவர் காலடி மண்ணை எடுக்க மக்கள் அவரின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டு பலர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்த நிலையில் சம்பவம் குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில், ஆன்மிகச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் பெயர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது, இதுவரை போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை..

யார் இந்த போலே பாபா ?

உபி.யின் காஸ்கன்ச் மாவட்டம் பட்டியாலில் கிராமத்தை சேர்ந்தவர் போலே பாபா. இவரது இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். இவர் உ.பி. காவல்துறையில் சில ஆண்டுகள் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். அதன்பிறகு கடந்த 1997-ல் அவர் உளவுப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவ்வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் கைது நடவடிக்கை காரணமாக சூரஜ் பால் உளவுப் பிரிவில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் பொதுவெளியில் அவர் தான் விருப்ப ஓய்வு பெற்றதாகவே கூறி வருகிறார். அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு தனது பெயரை சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா என மாற்றிக் கொண்டு காஸ்கன்ச்சில் ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி பிரசங்க கூட்டங்கள் நடத்தத் தொடங்கினார். அதில் அவர் தன்னை ஒரு பாபா என்றும் தனக்கு கடவுள் அருள் உள்ளதால் தன்னிடம் வந்தால் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும் என்பது போன்ற மாய பிம்பத்தை மக்களிடையே உண்டாக்கி தன்னைப் பின்தொடர ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளார். தற்போது இவருக்கு வட இந்தியாவில் பல லட்சம் பக்தர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டில் ஒரு பிரசங்கக் கூட்டம் நடத்தியுள்ளார். இதில் தனது வளர்ப்புப் பெண் உடல்நலம் குன்றி இறந்ததாகக் கூறி அவரைக் கூட்டத்தில் வைத்துப் பிரார்த்தனை செய்துள்ளார். அப்போது இறந்ததாகக் கூறிய அப்பெண் உயிர்ந்தெழுந்ததாகப் பொதுமக்களை நம்பவைத்துள்ளார். பிறகு அந்தப் பெண்ணை ஆக்ராவில் உள்ள ஒரு சுடுகாட்டில் வைத்து எரிக்க முயன்றபோது மீண்டும் போலீசில் சிக்கியுள்ளார். பாபாவுடன் சேர்த்து 7 பேரை ஆக்ரா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இந்த வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என பாபா விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த பிரச்னை காரணமாக சில வருடங்கள் ஆக்ரா பகுதியில் இவர் கூட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. இந்தப் பிரச்சனையின் வீரியம் குறைந்து மக்கள் அதை மறந்த பின்பு மீண்டும் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவர் எல்லாக் கூடங்களிலும் ,” கூடிய விரைவில் ஒரு பிரளயம் நடக்கப் போகிறது ,”என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சம்பவத்தன்று நடந்த கூட்டத்தில் அவர் தனது உரையின் கடைசியில்,” கூடிய விரைவில் ஒரு பிரளயம் நடக்கப்போகிறது” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் பலர் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக அடிக்கடி கூரி வந்துள்ளார். அதை மெய்யாக்கும் வண்ணம் கடந்த வருடம் ஜனவரி 3-ல் இவரது பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வந்துள்ளார். இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்த அகிலேஷ், “போலே பாபா சர்வதேச சமூகத்தாலும் பாராட்டத் தகுதியானவர்” என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோதும் பாபாவின் செல்வாக்கு ஓங்கி வளர்ந்துள்ளது. அவரது ஆட்சிக்காலங்களில் போலே பாபா சிவப்பு விளக்கு வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வலம்வந்துள்ளார். பாபாவும் மாயாவதியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் அங்கு நிற்காமல் சென்றுள்ளனர்.

போலே பாபாவின் கருத்து :

ஹாத்ரஸ் சம்பவத்திற்கு பின் தலைமறைவான போலே பாபா இச்சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து போலே பாபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். இதனால், அங்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. சில சமூகவிரோதிகள் தான் இந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்னையை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள போலே பாபா, இதில் வாதிட உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஏ.பி.சிங்கை நியமித்துள்ளார். மூத்த வழக்கறிஞரான ஏ.பி.சிங் டெல்லியின் நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாத்ரஸ் சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறும்போது, “இந்த வழக்கில் முழு ஒத்துழைப்புதர பாபா தயாராக உள்ளார். இந்த பிரச்சனையில் முழுமையான விசாரணை அவசியம் என்பது அவரது கருத்து.” எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் : 

கூட்டம் முடிந்த பிறகு கூட்டத்தைக் கையாண்ட தன்னார்வலர்கள் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான கூட்டம், போதிய அளவு வெளியேறும் பாதைகள் இல்லாதது, மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்கள் அதிக உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம். இந்த கூட்டத்துக்கு 80,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நிகழ்வில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மெத்தனப்போக்கால் 121 உயிர்கள் பையானதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். இவர்கள், அந்த ஆசிரமத்தின் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றியவர்கள். மேலும், போலே பாபாவின் குற்றப் பின்னணி குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவித்தொகை:

இதுவரை இச்சம்பவத்தில் 121பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநில அரசும், மத்திய அரசும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமும் உயிரிழந்தவர்களின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விச் செலவை உத்தரப் பிரதேச அரசே ஏற்கும் எனவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதேபோல், பிரதமர் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டது.