இந்தியா

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - ஒருவர் மட்டுமே குற்றவாளி என தீர்ப்பு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - ஒருவர் மட்டுமே குற்றவாளி என தீர்ப்பு

Sinekadhara

நாட்டியே உலுக்கிய ஹத்ராஸ் பட்டியலின பெண்ணின் கொலைவழக்கில் ஒருவரை குற்றவாளியாக தீர்த்து தீர்ப்பளித்திருக்கிறது ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம். 

செப்டம்பர் 29 ஆம் தேதி, உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண், கூட்டுபாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29ஆம் தேதி இறந்தார். அவர் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவரது உடல் அவசர அவசரமாக இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள் இல்லாமல் காவல்துறையினர் தகனத்தை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால் உறவினர்களின் விருப்பத்தின்படியே உடல் உடனடியாக தகனம் செயப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்தச்சம்பவம் குறித்து விசாரிக்க முதலில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருந்த உத்தரபிரதேச அரசு, நெருக்கடி முற்றியதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது. கூட்டுபாலியல் வன்கொடுமை, கொலை, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இதனிடையே இவ்வழக்கை விசாரிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் சந்தீப்(20), ரவி(35), லுவ் குஷ்(23) மற்றும் ராமு(26) ஆகிய நான்கு பேர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சிபிஐ விசாரணை ஒரு புறம் நடந்தாலும் அலகாபாத் உயர்நீதிமன்றமும் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது.

இந்நிலையில் இந்த வழக்கானது ஹத்ராஸிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சந்தீப் சிங்கை இந்திய சட்டப்பிரிவு 304 மற்றும் SC/ST பிரிவுகளின் கீழ் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.